யாழ். நுாலகத்தின் மீது வைக்கப்பட்ட தீ,  இன்னமும் பற்றி எரிகின்றது – வேடியப்பன்

“யாழ். நூலகத்தின் மீது வைக்கப்பட்ட தீ, தமிழர்களின் உடல்களில், தமிழர்களின் நிலங்களில்  இன்னமும் பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறது”  என தமிழகத்தின் பிரபல பதிப்பகமான டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) பதிப்பக உரிமையாளர் வேடியப்பன் தெரிவித்துள்ளார்.

யாழ். நுாலகம் சிங்கள பௌத்த பேரினவாதத்தினால் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் ஆன நிலையில் அது குறித்து “இலக்கு” செய்தி நிறுவனத்திடம் உரையாடியபோது,

“ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால், முதலில் அந்த இனத்தின் மொழியையும், அவர்களின் அறிவுசார் அடையாளங்களையும் அழித்தால் அந்த இனம் தானாக அழிந்து விடும்” என்று சொல்லுவார்கள்.

இதுவரைக்கும் உலகம் முழுக்க இனவழிப்பின் தொடக்கமாக அல்லது இனவழிப்பின் முக்கியத்துவமான அழித்தொழிக்கும் வேலையாக இதுதான் நடந்துள்ளது. அப்படிப்பட்ட ஒன்று தான் யாழ்ப்பாண நூலக எரிப்பும்.

தமிழர்களின் இதயமாக, தமிழின் கருவூலமாக, அறிவுசார் அடையாளமாகத் திகழ்ந்த யாழ். நூலகத்தை, இலங்கையில் இப்போது வரைக்கும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் அழித்தொழித்து, தற்போது நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. அன்று நூலகத்தின் மீது வைக்கப்பட்ட தீ,  ஈழத் தமிழர்களின் உடல்களில், அவர்களின் நிலங்களில் இன்னமும் பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறது.

ஈழப் போராட்டம் மட்டுமல்ல, இந்த மண்ணில் இதுவரை நடந்த எந்த போராட்டமும், காலம் கடந்தேனும் அதற்கான நியாயமான முடிவு கிடைக்காமல் போனதாய் வரலாறு இல்லை. அப்படி ஒரு விடிவு ஈழத்திலும் எதிர்காலத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது” என்றார்.