Tamil News
Home செய்திகள் யாழ்.குடா நாட்டில் அத்தியாவசியப் பொருள்களுக்கு குறைவில்லை- ஜெயசேகரம் விளக்கம்

யாழ்.குடா நாட்டில் அத்தியாவசியப் பொருள்களுக்கு குறைவில்லை- ஜெயசேகரம் விளக்கம்

யாழ்.குடா நாட்டில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்புள்ளன என தெரிவித்த யாழ்ப்பாணம் வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம், செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

இது  குறித்து விளக்கம் அளித்த அவர்,

“சமூகத் தொற்று காரணமாக நாடு முடக்கப்படும் என்ற சந்தேகத்தினால் அத்தியாவசியப் பொருள்களை அதிகளவாக கொள்வனவு செய்கின்ற நிலையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்த நடவடிக்கை தேவையற்ற ஒன்று. யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தற்போதைய சூழலில் தேவையான அளவு அத்தியாவசியப் பொருள்கள் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் கையிலிருப்பில் உள்ளன. அது மட்டுமன்றி கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துவரப்படுகின்றன.

ஆகையால் தேவையற்ற முறையில் பொருள்களை கொள்வனவு செய்து தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம். அது மட்டுமன்றி ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பொருள்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கும் திட்டத்துக்கும் வர்த்தகர்கள் தயாராகவே உள்ளனர்” என  தெரிவித்தார்.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் சமூகப்பரவலாக கண்டறியப்பட்டுள்ளது. அதனால் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக சில இடங்களில் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் உணவுப்பொருட்களை சேமிக்கும் நோக்கில் கடைகளில் பெருமளவில் கூடுகின்றனர்.

இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம், இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version