Tamil News
Home செய்திகள் யாழ். கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபடும் இந்தியப் படகுகள்

யாழ். கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபடும் இந்தியப் படகுகள்

யாழ். நெடுந்தீவு கரையை அண்மித்த கடலில் இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி மீனபிடியில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு  யாழ்ப்பாணக் கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகள் தொடர்பில் மீனவர்கள் தரப்பில் முறையிடப்பட்டு வந்த போதிலும், அரசு தரப்பில் அதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கரையில் இருந்து சுமார் 2 கடல் மைல் தொலைவுவரை அத்துமீறிய இந்திய இழுவைப் படகுகள் பகல்-இரவு என எவ்வேளையிலும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபான்று முல்லைதீவுக் கடற்பரப்பிலும் அண்மைய நாட்களில் இந்திய மீன் பிடி படகுகள்,  சட்டவிரோத மீனபிடியில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மீனவர்களினால் குற்றம் சுமத்தப்படுகின்றது.

இந்நிலையில் டிசம்பர் 22ஆம் திகதி மற்றும் 30ஆம் திகதிகளில் இந்திய, இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து 5 முறை நடந்துள்ளன. இருந்தும் எந்தத் தீர்வும் எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீப காலங்களாக தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும் அதிகரித்துள்ளன. அதேபோல் இந்திய மீனவர்களும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் தமிழ் மீனவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version