யாழ். அரும்பொருள் காட்சியகம் நாவற்குழியில் இன்று திறப்புவிழா

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன் முறையாக சிவபூமி யாழ்ப்பாணம் அரும் பொருள் காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் இன்று சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படுகிறது.

சுமார் 12 பரப்புக் காணியில் 3 மாடிக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்நுழைவாயிலைச் சங்கிலிய மன்னன், எல்லாள மன்னன் இருவரின் உருவச் சிலைகள் அலங்கரிக்கின்றன. உள்ளே யாழ்ப்பாணப் பேரரசை ஆட்சி செய்த 21 மன்னர்களின் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருக்கும் உருவச் சிலை அமைப்பது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். அதுமட்டுமன்றி எமது முன்னோர்கள் பயன்படுத்திய வண்டிகள் , கூடார வண்டில், திருக்கை வண்டில், சவாரி வண்டில் உட்பட போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் காட்சிப்படுத்தப்படவிருக்கின்றன.

1950ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளிவந்த 17 மோட்டார்க் கார்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன. தட்டி வான் என்று சொல்லப்படுகின்ற 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் அறிமுகமான மக்கள் போக்கு வரத்துக்குப் பயன்படுத்திய வாகனம் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது.

முதலாவது தளத்தில் தமிழர் பாரம்பரியத்தோடு தொடர்புடைய பாரம்பரி பொருள்கள், யாழ்ப்பாணத்தில் தமிழர் பண்பாட்டில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

பித்தளைப் பாத்திரங்கள் தொடக்கம் ஆரம்பகாலத்தில் வெளிவந்த கடிகாரம், வானொலிப் பெட்டி, முன்னோர் பயன்படுத்திய அருவி வெட்டும் கருவி, போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்து நாணயங்கள், அதன்பின்னர் வெளிவந்த ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள், ஆங்கிலேயர் காலத்தில் யாழ்ப்பாணம் உட்பட நாடுமுழுவதும் உள்ள பகுதிகளின் ஒளிப்படங்கள் என இவை எல்லாம் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இரண்டாவது தளத்தில் ஈழத்துப் புலவர்கள், பண்டிதர்கள், பாவலர்கள், பாடசாலைகளை நிறுவிய நிறுவுநர்கள் மற்றும் எமது சமய, கலாசார நிகழ்வுகளான சூரன்போர், நல்லூர் கந்தசுவாமி ஆலய ஆன்மிகப் பழமை வாய்ந்த தோற்றங்கள், நல்லூர் கந்தசுவாமி ஆலய வரலாற்றை வெளிப்படுத்தும் பெயர்கள், கீரிமலை நகுலேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், கோணேஸ்வரம் உள்ளிட்ட ஆலயங்களின் ஆதி ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

1800ஆம் ஆண்டுகளிலிருந்து யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகைகளின் முதலாம் நாள் வெளிவந்த பத்திரிகைப் பிரதிகளின் முன்பக்கம் காட்சிப்படுத்தப்படவுள்ளன. சுமார் 3 ஆயிரம் ஒளிப்படங்களைக் கொண்டு இரண்டாவது தள மாடியில் வரலாற்று அடையாளங்கள் காட்சிப்படுத்தப் படவுள்ளன.

மூன்றாவது தளத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்திரமும் வடிவமைப்பும் மாணவர்களால் வரையப்பட்ட மரபு ரீதியான ஓவியங்கள், தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவ்வாறு ஒரு பிரமாண்டமான அரும் பொருள் காட்சியகமாக இது உருவாக்கப்படவுள்ளது.