Tamil News
Home செய்திகள் யாழ்ப்பாணத்தில் முதல் கொரோனா மரணம் பதிவு – சடலம் தகனம் செய்யப்பட்டது

யாழ்ப்பாணத்தில் முதல் கொரோனா மரணம் பதிவு – சடலம் தகனம் செய்யப்பட்டது

 

கொவிட் -19 நோயால் யாழ்ப்பாணத்தில் முதலாவது நபர் நேற்று உயிரிழந்துள்ளார். தீவகம் வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், வடக்கில் நான்காவது நபர் கொவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் பாரிசவாதம் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர், யாழ். போதனா வைத்தியசாலைக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்ட நிலையில் அநுராதபுரம் சிகிச்சை நிலையத்துக்கு அவர் மாற்றப்பட்டார். எனினும் அவரது உடல்நிலை கடுமையானதால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் மீளவும் மாற்றப்பட்டார். அவரை கொவிட் -19 தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டது.

எனினும் அவர் சிகிச்சை பயனின்றி நேற்று காலை உயிரிழந்தார். அவரது சடலம் நேற்று சில மணிநேரத்திலேயே கொவிட் -19 சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய உறவினர்கள் சிலரின் பங்கேற்புடன் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் வவுனியாவில் ஒருவரும் மன்னாரில் இருவரும் என மூவர் கோவிட் -19 நோயால் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் முதலாவது நோயாளி உயிரிழந்துள்ளார்.

Exit mobile version