யாழில் அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம் அரியாலைப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் அரியாலைப்பகுதியில் உழவு இயந்திர சாரதி மீது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இதனால் குறித்த சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.

குறித்த துப்பாக்கி சூட்டில் அரியாலை முள்ளி பகுதியை சேர்ந்த கிஸ்ணராஜா சஜித்(வயது 20)  என்ற இளைஞனே வலது காலில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுளளார்.

அரியாலைப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் கடத்தப்படுவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்ததாகவும் அது தொடர்பில் விசாரணை செய்ய முற்பட்ட போது குறித்த உழவு இயந்திர சாரதி சிறப்பு அதிரடிப்படையினரின் வாகனத்தை மோத முயற்சித்ததாகவும் அதனாலேயே விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தடயவியல் மற்றும் குற்றவியல் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது