யாழில் அதிகரிக்கும் கொரோனா – வவுனியாவில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வர்த்தகர் சங்கம் அறிவுறுத்தல் 

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்காணப்படும் நிலைமைகளை அடுத்து, வவுனியாவிலுள்ள வர்த்தகர்களை நடைமுறையிலுள்ள சுகாதார முறைகளை இறுக்கமாகவும் முழுமையாக பின்பற்றுமாறு வர்த்தகர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது . 

இது குறித்து வர்த்தகர் சங்கம் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து காணப்படும் நிலைமையை அடுத்து வவுனியா நகரிற்கு வரும் பொதுமக்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

எதிர்வரும் தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு வர்த்தக நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் நன்மை கருதியும் தொற்றாளர்கள் அதிகரிப்பை கட்டுப்படுத்தவும் வர்த்தக நிலையங்களில் நடைமுறைகளிலுள்ள சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து கைகழுவி சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும்.

வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதுடன் சமூக இடைவெளிகளையும் பின்பற்றுமாறும் வாடிக்கையாளர்களை கைகழுவி வர்த்தக நிலையங்களுக்குள் அனுமதிக்குமாறும் நகரில் சுகாதாரத்துறையினர்  காவல்துறையினருடன்  இணைந்து வவுனியாவில் இடம்பெற்று வரும் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் உத்தியோகத்தர்களுக்கு தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

மேலும் சமூகத்தில் ஏற்படவிருக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் முன்னர் இடம்பெற்றதைப்போன்று வவுனியா நகரை முடக்கல் நிலைமைகளுக்குள் கொண்டு செல்லாமல் இருப்பதற்கும்  ஒத்துழைப்புக்களை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா வைத்தியசாலை தாதியருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் குறித்த இளைஞருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனையில் நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியாவில் நேற்றுமுன்தினம் நான்கு தாதியர்கள் உட்பட 6 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் இதுவரை கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.