Home செய்திகள் மே தினத்தன்று ரணிலை அறிவிப்பதிலிருந்து ஐ.தே.க. பின்வாங்கியது ஏன்?

மே தினத்தன்று ரணிலை அறிவிப்பதிலிருந்து ஐ.தே.க. பின்வாங்கியது ஏன்?

000 மே தினத்தன்று ரணிலை அறிவிப்பதிலிருந்து ஐ.தே.க. பின்வாங்கியது ஏன்?ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு மீண்டும் அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்திருப்பது கொழும்பு அரசியலில் குழப்பமான ஒரு நிலையை உருவாக்கியிருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவின் கணிசமான பகுதியை ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின மேடையில் இணைப்பதற்கு ஐ.தே.க தவறியதை அடுத்து, முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக “ஐலன்ட்’ பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின மேடையில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு முதலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் அவர்களது மே தினக் கூட்டம் அவர்கள் எதிர்பார்த்தது போல் அமையாததால் ஐக்கிய தேசியக் கட்சி அந்த அறிவிப்பை வெளியிடுவதிலிருந்து பின்வாங்கி விட்டது.

“ஐலன்ட்” எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வட்டாரங்கள், மே தினத்தன்று ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் மாறத் தயாராக இருந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் கடைசி நேரத்தில் அதைச் செய்ய மறுத்துவிட்டதாக தெரிவித்தன.

இந்த நிலையில், இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தலை முன்னெடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பசில் ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு 7 மலலசேகர மாவத்தையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர்கள் கடந்த சனிக்கிழமை சந்தித்தனர். பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய பின்னர் அவர்களுக்கு இடையில் இதுவரை ஐந்து சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த விஷயத்தில் இரு கட்சிகளும் இன்னும் ஒருமித்த கருத்துக்கு வரவில்லை. அரசியலமைப்பின் படி, ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version