Home ஆய்வுகள் மேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல்...

மேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் நலன்சார் அரசியலுக்குள் சிக்கியுள்ளது. போர் நிறைவடைந்த பின்னர் ஜெனீவாவில் இடம்பெற்ற சம்பவங்களின் ஒரு சில பகுதிகளை ஆய்வு செய்வதன் மூலம் அதனை நாம் தெரிந்துகொள்ளலாம்.

போர் நிறைவடைந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ,நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 17 ஆவது கூட்டத்தொடரை இந்திய அரசின் உதவியுடன் சிறீலங்கா அரசு முறியடித்திருந்தது. அது மட்டுமல்லாது சிறீலங்காவை பாராட்டும் நிகழ்வாகவே அது அமைந்திருந்தது. ஆனால் 18 ஆவது கூட்டத்தொடரை கட்டுப்படுத்தும் நிலையை இந்திய அரசு சற்றே தளர்த்தியிருந்தது.

சிறீலங்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் வலுவடைந்துவந்த பிணைப்புக்கள், சிறீலங்காவுக்காக தமிழகத்தை இழக்கும் நிலைக்கு இந்திய காங்கிரஸ் தள்ளப்பட்டதும் இந்தியாவின் அந்த பின்னடிப்புக்கான காரணம். அதனை சரிசெய்வதற்கு இந்திய, இலங்கை கடற்படையினரின் கூட்டுப் போர் ஒத்திகைக்கு சிறீலங்கா ஒத்துறைப்புக்களை வழங்கியிருந்தது. போர் நிறைவடைந்த பின்னர் நடைபெற்ற கடல் ஒத்திகைகளில் அதுவே மிகப்பெரிய ஒத்திகை.

2010 ஆம் ஆண்டளவில் திருமலைத்துறைமுகத்தில் கடற்காகம் என்ற முப்படை சிறப்பு கடல் ஒத்திகையை சீனாவின் ஆதாவுடன் சிறீலங்கா அரசு மேற்கொண்டுடிருந்த நிலையில் ஐந்து நாள் கடல் ஒத்திகை ஒன்றை இந்தியா மேற்கொண்டிருந்தது.

மேற்குலகின் அன்றைய நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக இந்தியாவை அனுசரிக்க வேண்டிய நிலைக்கு மகிந்த ராஜபக்சா அரசு தள்ளப்பட்டிருந்தது. அதாவது அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக் இன் வருகையை முன்னிட்டு சிறீலங்காவின் கையை முறுக்கி அந்த கடல் ஒத்திகைக்கு இணங்க வைத்திருந்தது இந்தியா.

அமெரிக்கா உள்நுளைவதும், சீனா உள் நுளைவதும் தனக்கு ஆபத்தானது என இந்தியா கருதுகின்றது. 1987 ஆம் ஆண்டு சிறீலங்காவுடன் அவசர அவசரமாக இந்தியா மேற்கொண்ட செல்லுபடியாகாத ஒப்பந்தம் கூட மேற்குலகத்தின் உள்நுளைவதை தடுப்பதாற்காகவே மேற்கொள்ளப்பட்டது.

Blake tweeting மேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்ஆனால் சிறீலங்கா அரசை பணியவைக்கும் முயற்சிகளை அமெரிக்காவும் சீனாவும் வேறுபட்ட தளங்களில் அணுகியிருந்தன. நிதி மற்றும் படைத்துறை ஒத்துறைப்புக்கள் என்ற தளத்தை சீனா எடுத்துக்கொண்டது, மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் என்ற தளத்தை அமெரிக்கா எடுத்துக்கொண்டது. எனவே தான் 2011 ஆம் ஆண்டு ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியதும், அதற்கு தேவையான அனுசரணைகளை வழங்கி சிறீலங்கா அரசு மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி அதனைக் காரணம் காட்டி பேரம்பேசும் நோக்கத்துடன் அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக் சிறீலங்காவுக்கு வருகை தந்திருந்தார்.

பிளேக்கைப் பொறுத்தவரையில் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையிலும் சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதுவராக பயணியாற்றியவர். அதாவது சிறீலங்கா மேற்கொண்ட போருக்கு முழு ஆதரவை வழங்கி தமிழ் மக்களின் அழிவுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த மனிதர். அது தான் அவருக்கான அறிமுகம்.

பிளேக்கின் நகர்வுக்கு அமைவாக அன்றைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனும் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பியிருந்தார். அன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் போது சிறீலங்கா விவகாரம் அதன் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருக்கவில்லை. எனவே சிறீலங்கா அரசு தன்னை சுதாகரித்துக் கொள்வதற்கு முன்னராக ஐ.நா அறிக்கை அங்கு அனுப்பப்பட்ட விடயம் சிறீலங்கா அரச தரைப்பை அதிர்ச்சிக்குள் தள்ளியிருந்தது.

எனினும் சிறீலங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சு சமர்ப்பித்த இராணுவ அறிக்கையை நவநீதம்பிள்ளைக்கு அனுப்பும் பணியை ஐ.நா செயலாளர் நாயகத்தின் அன்றைய சிறப்பு ஆலோசகர் விஜய் நம்பியார் மேற்கொண்டது சிறீலங்கா அரசுக்கு சிறு ஆறுதலை கொடுத்ததுடன் இந்தியா மீண்டும் சிறீலங்காவை காப்பாற்றியிருந்தது.

அதேசமயம் சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜக்சாவை தனிமையில் சந்தித்த பிளேக், ஜெனீவாவில் நடைபெறும் கூட்டத்தொடரில் சிறீலங்கா மீது தீர்மானங்கள் கொண்டுவரப்படாமாட்டாது என்ற உறுதிகளை வழங்கியதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

அது மட்டுமல்லாது சிறீலங்கா அரசுடன் பேச்சுக்களை முறித்துக்கொண்டு வெளியேறிய தமிழத் தேசியக் கூட்டமைப்பையும் சிறீலங்காவுடன் மீண்டும் பேசி காலத்தை இழுத்தடிக்கும் நகர்வுக்குள் பிளேக் பலவந்தமாக தள்ளியிருந்தார். தமிழத் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் அமெரிக்காவையோ, இந்தியாவையே எதிர்த்து தமது வாதங்களை முன்வைக்கும் உறுதியான நிலையில் அவர்கள் என்றுமே இருந்ததில்லை.

ஒருபுறம் மகிந்தாவை சமாதானப்படுத்தும் நடவடிக்கையை பிளேக் மேற்கொள்ள, மறுபுறம் சிறீலங்கா மீது ஒரு தீர்மானத்தை கொண்டுவரும் நடவடிக்கைகளை அமெரிக்காவின் ஆதரவுடன் கனடா 2011 ஆம் ஆண்டு மேற்கொண்டிருந்தது. அதனை கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயர்ட் மேற்கொணடிருந்தார். ஆனால் அதற்கு போதிய காலஅவகாசம் அப்போது இருக்கவில்லை. பின்னர் 2012 ஆம் ஆண்டு கனடா பிரதமர் காப்பர் மற்றுமொரு முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

தனது நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டும் முயற்சியாக பல நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விருந்துபசார நிகழ்வை மேற்கொண்ட கனடாவுக்கான ஐ.நா பிரதிநிதிகள் அந்த நிகழ்வில் சிறீலங்கா மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விளக்கங்களை அளித்து தமது தீர்மானத்திற்கான ஆதரவையும் கோரியிருந்தனர்.

ஆனால் அவை யாவும் சிறீலங்காவை மிரட்டப் பயன்படுத்தப்பட்டதே தவிர, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக அல்ல என்பதை காலம் நமக்கு தற்போது உணர்த்தியுள்ளது.

ஏனெனில் அதே கனடா தான் தற்போது சிறீலங்கா கேட்காமலே அதற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தை வழங்கியுள்ளது. அதற்கான காரணம் அமெரிக்காவுக்கு சார்பான அரசு ஒன்று சிறீலங்காவில் அமைந்துள்ளதேயாகும்.

தற்போது சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா மீது அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கும் ரணில் அரசை காப்பாறறும் அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கையே தவிர அதில் தமிழ் மக்கள் மகிழ்ச்சி கொள்வதற்கான காரணங்கள் எதுவுமில்லை.

அதாவது இது ஒரு பேரம்பேசும் அரசியல் அழுத்தம். 2011 ஆம் ஆண்டு ஜெனீவா தீர்மானங்களை பேரம்பேசும் பொருளாகப் பாவித்து அன்றைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவுடன் பேரபேச முற்பட்ட பிளேக்கின் செயற்பாட்டிறிகும் தற்போதைய வழக்கிற்கும் அதிக வேறுபாட்டை காணமுடியாது.

அதாவது இந்த நாடுகளின் நலன்சார்ந்த அரசியலில் தான் தமிழ் மக்களின் உரிமைகளும், அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியும் தங்கியுள்ளது. இந்த நலன்சார் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் மேற்குலகத்;தை மட்டும் சார்ந்திருக்கும் எமது இராஜதந்திர உறவுகளை ஏனைய நாடுகளை நோக்கி நகர்த்த வேண்டும்.

Exit mobile version