மேய்ச்சல் தரை காணிகளை குறி வைத்து அபகரிக்கும் பெரும்பான்மையினர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரமுந்திரிகைச் செய்கை என்ற பெயரில் மேய்ச்சல் தரை காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கந்தர்மல்லிச்சேனை, வெட்டிப்போட்டசேனை உட்பட பல பகுதிகளில் இவ்வாறான மேய்ச்சல் தரை காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதியில் ஏற்கனவே சிங்கள மக்களைக் கொண்டு சேனைப்பயிர்ச் செய்கை என்ற போர்வையில் காணிகள் அபகரிக்கப்பட்ட நிலையில், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கொண்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.

இப்பகுதியில் வன இலாகா, பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் அனுமதியில்லாமல் மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய காணியில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிவில் பாதுகாப்பு பிரிவினர் சுமார் 1500 ஏக்கரில் சுமார் ஆறாயிரம் மரமுந்திரிகை மரங்களை நடும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள மேய்ச்சல் தரைக்காணிகளில் நடப்படும் மரமுந்திரிகை செய்கையினை பராமரிப்பதற்காக சிவில் பாதுகாப்பு படையினர் ஒருவருக்கு இரண்டு ஏக்கர் வீதம் காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் பல ஆண்டுகாலமாக   கால்நடைகளை வளர்ப்பதாகவும் ஆனால் தற்போது மாடுகளை மேய்ப்பதற்கு கொண்டுசெல்லாத வகையில் படையினர், முகாம் அமைக்கும் வேலி கம்பிகளைக்கொண்டு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வேலிகளுக்கு மின்சார இணைப்பும் வழங்கியுள்ளதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் மேய்ச்சல் தரைகள் அபகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் பாதிக்கப்படும் நிலையில், மாடுகள் பசியால் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் பண்ணையாளர்கள்,  இந்த நில அபகரிப்பு நடவடிக்கையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என   கோரிக்கை விடுத்துள்ளனர்.