மேச்சல் தரை விவகாரம் -பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க நீதி மன்றம் உத்தரவு

மட்டக்களப்பு,மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல்தரை வழக்கு முடியும் வரையில் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும்,மேய்ச்சல் தரையினை பாவிப்பதை தடைசெய்யவேண்டாம் எனவும் மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை பகுதியில் அத்துமீறிய அபகரிப்பு தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

IMG 3701 மேச்சல் தரை விவகாரம் -பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க நீதி மன்றம் உத்தரவு

கடந்த மாதம் 18ஆம் திகதி பண்ணையாளர்கள் சார்பில் மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல்தரை அபகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு,
இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மேய்ச்சல் தரையில் பண்ணையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து குறிப்பிட்ட அதிகாரிகள் மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்,பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரையை பாவிப்பதை தடைசெய்யக்கூடாது என்று மன்று வலியுறுத்தியதையடுத்து அதனை நடைமுறைப்படுத்துவதாக அரச சட்டத்தரணி ஏற்றுக்கொண்டதுடன் அது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

தற்போது மேய்ச்சல் தரை அபகரிப்பட்டதாக தெரிவிக்கப்படும் பகுதியை தவிர அப்பகுதியில் எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்ககூடாது என்பதற்கும் அரச சட்டத்தரணி இணக்கம் தெரிவித்தார்.

IMG 3679 மேச்சல் தரை விவகாரம் -பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க நீதி மன்றம் உத்தரவு

இந்நிலையில், வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரையில் தற்போது பிடிக்கப்பட்டுள்ள காணியை அவ்வாறே பேணுமாறும் வேறு எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்ககூடாது என பணிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரத்தினவேல் தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.