Tamil News
Home செய்திகள் முஸ்லீம் அமைச்சர்கள் ஏற்கனவே பதவிவிலகல் கடிதங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டனர் – ரணில் விக்கிரமசிங்க

முஸ்லீம் அமைச்சர்கள் ஏற்கனவே பதவிவிலகல் கடிதங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டனர் – ரணில் விக்கிரமசிங்க

பதவிகளை இராஜினாமாச் செய்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு அவர்களது இராஜினாமாக் கடிதத்தை தம்மிடம் கையளித்ததாகவும் அது தொடர்பில் அதற்கு மறுநாளே அமைச்சரவையில் வைத்து தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமாக் கடிதங்கள் தொடர்பில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதமர்,

பதவிகளை இராஜினாமாச் செய்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு என்னிடம் அவர்களது இராஜினாமா கடிதங்களை கையளித்தனர்.

நான் அதை ஏற்றுக் கொண்டு அதற்கு அடுத்த நாள் அமைச்சரவையில் ஜனாதிபதிக்கு அது தொடர்பில் அறிவித்தேன் . எனினும், நம் நாட்டின் தற்போதைய அரசியலமைப்பின்படி இராஜினாமாக் கடிதம் தனித்தனியே வழங்கப்பட வேண்டும் என்பதை அப்போது ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார்.

அதனையடுத்து நான் அவர்களிடம் தனித்தனியே இராஜினாமாக் கடிதங்களை கோரினேன். அவர்கள் அதனை இன்றைய தினம் தருவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.

எவ்வாறெனினும் இடைப்பட்ட சில தினங்களில் முஸ்லிம் மக்களின் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அதனால் முஸ்லிம் அமைச்சர்கள் தமது ஊர்களுக்கு சென்றிருந்த நிலையில் அவர்களால் தமக்கான இராஜினாமாக் கடிதத்தை வழங்க முடியாமல் போயுள்ளது

அவர்கள் இன்றைய தினம் தனித்தனியே தமது இராஜினாமாக் கடிதங்களை எமக்கு கையளிப்பர் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார் .

தினேஷ் குணவர்தன எம்.பி தமது கேள்வியின்போது,

சம்பந்தப்பட்ட முஸ்லிம் அமைச்சர்கள் தமது இராஜினாமாக் கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் சில தேசியப் பத்திரிகைகள் அந்த இராஜினாமாக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளருக்கு இதுவரை கிடைக்கவில்லையென ஜனாதிபதியின் செயலாளரே அதனை குறிப்பிட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இராஜினாமாக் கடிதம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலகினார்களா? அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் எமக்கும் நாட்டு மக்களுக்கும் தெளிவில்லாத நிலையே உள்ளது

அந்த இராஜினாமாவை உறுதி செய்யும் வகையில் பாராளுமன்றத்தில் சபாநாயகர் அது தொடர்பில் அறிவிக்க வேண்டுமென தினேஷ் குணவர்தன எம். பி கேட்டுக்கொண்டார்

இதனையடுத்து பதிலளித்த போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Exit mobile version