Tamil News
Home செய்திகள் முஸ்லிம் பயங்கரவாத குழு தலைவரை அழைத்துவர புலனாய்வுப் பிரிவினர் சவுதி பயணம்

முஸ்லிம் பயங்கரவாத குழு தலைவரை அழைத்துவர புலனாய்வுப் பிரிவினர் சவுதி பயணம்

சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் அவசரமாக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளனர். அங்குள்ள தேசிய தௌஹீத் ஜமாத்தின் ஆயுதப்பிரிவுத் தலைவர் மொஹமட் மிலான் என்ற அபு செய்லானை அழைத்து வருவதற்காக சென்றுள்ளதாக சிறிலங்கா பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏப்ரல் 21 தாக்குதல் சஹ்ரானின் தலைமையிலான ஐ.எஸ் அமைப்பின் ஆதரவுடன் நடத்தப்பட்டது எனக் கூறப்பட்ட போதிலும், அத் தாக்குதலை வழிநடத்தியவர் அபுசெய்லான் என அறியப்பட்டுள்ளது. முகமட் மிலான் எனும் அபு செய்லா, வவுணதீவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும், வண்ணாத்திவில்லு சஹ்ரானின் பயிற்சி முகாமைக் காட்டிக் கொடுத்த அமைச்சர் கபீர் காசிமின் இணைப்பாளர் மொகமட் நஸ்லின் மீதான துப்பாக்கித் தாக்குதலையும் நடத்தியவர் என தெரிய வந்துள்ளது.

தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்ற போது அவர் மக்கா சென்றிருந்தார் எனவும் அத்துடன் அபு செய்லான் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தார் எனவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் தாக்குதல்கள் நடைபெற்ற சமயம் அவர் மக்கா சென்றுள்ளார் என்று சவுதி மற்றும் சர்வதேச பொலிசாருக்கு சிறிலங்கா புலனாய்வு பிரிவால் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. தற்போது அவர் சவுதியிலிருந்து சிறிலங்கா வருவிருக்கின்றார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.

சிறிலங்கா வருவதற்காக அவர் சவுதி விமான நிலையம் வந்த போதும், அவர் விமானத்தில் ஏறவில்லை என்றும் சவுதி விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார் என்றும் தகவல்கள் கிடைத்திருந்தன. அன்றே அவர் சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அவர் சிறிலங்கா வரவில்லை. இதனால் இவரை அழைத்து வருவதற்கு விசேட குழு முயற்சி மேற்கொண்ட போதும் எதுவித பலனும் கிடைக்கவில்லை.

பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளையடுத்த கடந்த மாதம் 11ஆம் திகதி நடத்தப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில், அவரை சிறிலங்கா அழைத்துவர சவுதி அரசாங்கம் ஒப்புதல் அளித்திருந்தது. இதன் அடிப்படையிலேயே இவரை அழைத்துவர குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஒரு குழுவினர்  சவுதி சென்றுள்ளது.

 

Exit mobile version