முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைப்பு – ஆவணப்படுத்துமாறு ஐ.நா. விடம் தமிழ்க் கட்சிகள் கோரிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட சம்பவத்தை ஆவணப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐநா மனித உரிமை ஆணையாளரிடம் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளார்கள். இது குறித்த கோரிக்கையை உள்ளடக்கிய கடிதம் ஒன்று 13 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி முள்ளிவாய்;க்கால் நினைவுத் தூபி உடைத்து சேதமாக்கப்பட்டது. இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த தூபி உடைக்கப்பட்டதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டனத்தை வெளியிட்டனர்.

இந்த நிலையில், ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் இதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் கடிதம் தயாரிக்கப்பட்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் கையொப்பம் பெறுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், உறுப்பினர்களும் கையொப்பமிட்டனர். இக்கடிதம் ஐநாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹாநா சிங்கர் மூலமாக ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கு ஆவணப்படுத்தக் கோரிஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், “2009 மே 18ல் முடிவடைந்த கொடிய யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூருமுகமாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி அண்மையில் அரச படையினரால் உடைத்து சேதமாக்கப் பட்டுள்ளமை, எமது உயிரிழந்த மக்களை நினைவு கூரும் உரிமையை அவமதிப்பதாகவே உள்ளது. இது ஒரு வெட்கக் கேடான மனித குலத்துக்கு எதிரான செயல்பாடு.

உலகில் உள்ள எவ்வகையான வலிமைபொருத்திய இராணுவத்தாலும் சின்னங்களை அழித்தாலும் மக்கள் மனதில் இருக்கும் சம்பவங்களையும் நினைவுகளையும் அழிக்க முடியாது. இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை ஆத்திரத்துடனும், மனவேதனையுடனும், விரக்தியுடனும் தமிழ் மக்களின் பிரதிநிகளாகிய நாம் பதிவு செய்கிறோம்.

நினைவேந்தல்கள் தொடர்பாக அண்மையில் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும் மனித உரிமைக்கும் எதிரான இந்த விடயத்தை ஆவணப் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்” என இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதில் பின்வரும் பாராளுமன்ற உறுபினர்கள் கையொப்பமிட்டுள்ளார்கள். நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் பா.உ. தலைவர் த.ம.தே. கூ., மனோ கணேசன் பா.உ. தலைவர், த. மு. கூ., செல்வம் அடைக்கலநாதன் பா. உ . த.தே. கூ, த. சித்தார்த்தன் பா. உ த.தே. கூ, எம். ஏ. சுமந்திரன் பா. உ. த.தே.கூ, கோ. கருணாகரம் (ஜனா) பா. உ த.தே.கூ, சி. சிறிதரன் பா.உ த.தே.கூ, ஐ. சாள்ஸ் நிர்மலநாதன் பா.உ த.தே.கூ, எஸ். வினோ நொகரதலிங்கம் பா.உ த.தே.கூ, சா. இராசமாணிக்கம் பா.உ த.தே.கூ, த. கலையரசன் பா.உ த. தே. கூ, வி. இராதாகிருஷ்ணன் பா.உ த.மு.கூ, எம். வேலுகுமார் பா.உ த.மு.கூ.

திருமலை மாவட்ட எம்.பி. இரா.சம்பந்தன் மற்றும் நுரரேலியா மாவட்ட எம்.பி. திகாம்பரம் ஆகியோர் சுகவீனம் காரணமாக பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்காமையால் அவர்கள் ஒப்பம் பெறப்படவில்லை. இருப்பினும் அவர்களுக்கும் இதில் உடன்பாடு உண்டு என்ற நிலையில் இக்கடிதம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.