முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – மட்டக்களப்பு மாவட்டத்திலும் 22 பேருக்குத் தடை உத்தரவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்துவதற்கு இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 22 பேருக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் ஆகிய மூன்று நீதிவான் நீதிமன்றங்களும் அந்தந்தப் பகுதிகளின் பொலிஸ் நிலையங்களின் விண்ணப்பங்களுக்கமைய தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தம் கருணாகரம், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் உட்பட 22 பேருக்கான தடை உத்தரவுக் கடிதங்களை நேற்று அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று பொலிஸார் கையளித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 11 வருடங்களாக முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் நிகழ்வு பல இக்கட்டான காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வந்தது. இந்தநிலையில் இவ்வருடம் நீதிமன்றத் தடை உத்தரவு மூலம் பொது இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், மக்கள் அனைவரும் நாளை – மே 18ஆம் திகதி தங்கள் வீடுகளில் கட்டாயம் விளக்கேற்றி நினைவேந்தலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.