முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைப்பு-மே17 இயக்கம் கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை சேதப்படுத்திய சிங்களப் பேரினவாத அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் என என மே17 இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மே 17 இயக்கம்  தெரிவித்துள்ளதாவது,

‘ஆங்கிலேய காலனியாதிக்க விடுதலைக்கு பிறகான ஒன்றிணைந்த இலங்கை தீவில் ஈழத் தமிழர்கள் ஒடுக்கப்பட்டதன் விளைவாக எழுச்சிபெற்ற தமிழீழ விடுதலை போராட்டத்தை நசுக்க, தனது புவிசார் நலனுக்காக இலங்கை, இந்தியாவுடன் இணைந்த வல்லாதிக்க நாடுகள் 2009 மே மாதம் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை அரங்கேற்றியது.

தமிழீழத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்விற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை சேதப்படுத்தியதோடு, புதிதாக கொண்டுவரப்பட்ட நடுகல்லையும் திருடியுள்ளது. இனப்படுகொலைக்கு பின்பும் தமிழர்கள் மீதான வன்மத்தை காட்டும் சிங்களப் பௌத்த பேரினவாத அரசை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழீழ இனப்படுகொலையின் இறுதி நாட்களான 2009 மே 15-18 நாட்களில் மட்டும் முள்ளிவாய்க்கால் பகுதியில் பெண்கள், குழந்தைகள் என லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக ஆண்டுதோறும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்தாண்டிற்கான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு கொல்லப்பட்டவர்கள் நினைவாக புதியதாக நடுகல் ஒன்றை அமைக்க நேற்று (12-05-2021) மாலை நடுகல் கொண்டுவரப்பட்டுள்ளது. நடுகல் எடுத்து வரப்பட்ட போது குழுமிய இலங்கை இராணுவத்தினர், காவல்துறை அனுமதி பெறவில்லை என்று கூறி, அனைவரையும் அங்கிருந்து அகற்றிய பின்பு இருள் சூழலில் அங்கு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தையும் சேதப்படுத்தியுள்ளது. கொண்டு வரப்பட்ட நடுகல்லும் தற்போது காணாமல் போயுள்ளது.

இறந்தவர்கள் நினைவாக நடுகல் வைத்து வணங்குவது தமிழர்களின் மரபு. அப்படியான மரபை கடைபிடிக்க அனுமதி மறுப்பது தமிழர்களின் மீதான இன அழிப்பை இலங்கை சிங்களப் பேரினவாத அரசு தொடர்வதையே காட்டுகிறது. அதே போல் நினைவுச் சின்னம் அழிப்பு என்பது, கொல்லப்பட்டவர்களை நினைவுகூற மறுக்கும் செயலாகும். முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிப்பு மற்றும் நடுகல் வைக்க அனுமதி மறுப்பு போன்றவை தமிழர்களின் கலாச்சார பயன்பாட்டிற்கு எதிரான இலங்கை இனவாத அரசின் நடவடிக்கையே. கலாச்சார பண்பாட்டிற்கு எதிரான நடவடிக்கையை இனப்படுகொலையின் ஒரு கூறாக ஐ.நா. வரையறுக்கிறது. எனில், இலங்கை அரசின் இந்த செயல்கள் தமிழர்கள் மீது தொடரும் இனப்படுகொலையின் ஒரு பகுதியே.

தமிழீழ இனப்படுகொலைக்கு பிறகான காலத்திலும் தமிழர்கள் தொடர்ச்சியாக இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதையே இச்சம்பவம் காட்டுகிறது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் மூலம் மேற்குலக நாடுகளின் ஆதவுடன் அமெரிக்கா கொண்டுவந்த இலங்கை அரசு மீதான தீர்மானங்கள் கூட தமிழர்களுக்கான நீதி பெற்றுத் தருவதை விட, இணப்படுகொலையிலிருந்து இலங்கை அரசை காப்பாற்றும் முயற்சிகளிலேயே ஈடுபட்டது. இதனை மே 17 இயக்கம் ஒவ்வொரு முறையும் அம்பலப்படுதியுள்ளது. கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசு மீதான தீர்மானம் கொண்டுவரப்பட்டு இனப்படுகொலைக்கான ஆதாராங்களை அழிக்கும் வகையில் மேலும் அதிக காலம் வழங்கியதையும் மே 17 இயக்கம் எடுத்துரைத்தது.

சில மாதங்களுக்கு முன்னால் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் சேதப்படுத்தப்பட்ட போது சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தது. பின்பு, இலங்கை அரசு அங்கு புதியதாக மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை அமைத்து கொடுத்தது. மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசு மீது தீர்மானம் கொண்டுவரப்படுகிறது என்ற நிலையில் இலங்கை அரசு செய்த தவறை சரி செய்தது. ஆனால் ஐ.நா. தீர்மானம் மீண்டும் அவகாசம் வழங்கிய நிலையில், இலங்கை அரசு மீண்டும் தமிழர்கள் மீதான இன அழிப்பு செயல்களில் ஈடுபட துவங்கியுள்ளது.
தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் மௌனம் காரணமாக இருக்கிறது. இலங்கைப் பேரினவாத அரசின் இந்த தமிழின விரோத செயல்களை கண்டிக்க முன்வர வேண்டுமென சர்வதேச சமூகத்திற்கு மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது. அடக்குமுறை மூலம் தமிழீழ விடுதலை உணர்வை நசுக்கிட முடியும் என்ற இலங்கையின் சிங்களப் பௌத்த பேரினவாத அரசின் கனவை தமிழர்கள் முறியடிப்பார்கள்’.