Tamil News
Home செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவு தூபியே அமைக்கப்படும் – மாணவர் ஒன்றியம்

முள்ளிவாய்க்கால் நினைவு தூபியே அமைக்கப்படும் – மாணவர் ஒன்றியம்

யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுவரும் நினைவுத் தூபி முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியாகவே அமைக்கப்படும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி எனும் பெயரில் முன்னர் இருந்த அமைப்பிலையே தூபி மீளக் கட்டப்படும் என மாணவர் ஒன் றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதைவிடுத்து அமைதித் தூபி எனும் பெயரிலோ அல்லது வேறு வடிவங்களிலோ தூபியை அமைக்க அனுமதிக்கமாட்டோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி சட்ட விரோதமானது எனக்கூறி கடந்த 8 ஆம் திகதி அது துணைவேந்தரால் இடித்தழிக்கப்பட்டது. இதன் பின்னர் மாணவர்களின் தொடர் போராட்டங்களால் தூபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில், தூபி விவகாரத்தில் நடைபெற்ற விடயங்களை விலாவரியாகக் குறிப்பிட்டு துணைவேந்தர் சிறிசற்குணராஜா அறிக்கை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அமைக்கப்படவுள்ள தூபியினை அமைதி தூபி எனும் பெயரில் அமைக்க பேரவை அனுமதியளித்துள்ள நிலையில் மாணவர் ஒன்றியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Exit mobile version