Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கான நீதி இன்றைய உலக அமைதிக்கான தேவை

முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கான நீதி இன்றைய உலக அமைதிக்கான தேவை

நேற்று, 08.05.2021 கிட்லரின் இன அழிப்பு ஆட்சிக்கு பிரித்தானியாவின் இணைவுடன் நேச நாடுகளின் படையணிகள் அன்றைய யேர்மனியைச் சரணடைய வைத்த, ஐரோப்பா மேலான வெற்றி நாள் (VE Day), 76ஆவது ஆண்டாக மேற்குலகில் கொண்டாடப்பட்டது. ஆயினும் யப்பானின் ஹிரோசிமா மேல் 1945 ஆகஸ்ட் 6ஆம் திகதியும், நாகசாக்கி மேல் ஆகஸ்ட் 9ஆம் திகதியும் அமெரிக்கா அணுக் குண்டுகளை வீசி, யப்பானை 14ஆம் திகதி சரணடைய வைத்ததை ஆகஸ்ட் 15 இல் யப்பான் மேலான வெற்றி நாளாக (VJ Day) மேற்குலகு கொண்டாடுகிறது. இரண்டு நாட்களிலும் இந்த யுத்தங்களில் பங்குபற்றிய போர் வீரர்களையும், உயிரிழந்த மக்களையும் போற்றி வணங்குதல் இந்நாட்களின் சிறப்பு நிகழ்வாக உள்ளது.

வருகிற 18.05.2021இல் சிறீலங்காவின் இனஅழிப்பு ஆட்சியில் முள்ளிவாய்க்காலில் 2009 இல் இதே தினத்தன்று 40000க்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் சிறீலங்கா அரசால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு பிரதேசங்களில், சிறீலங்காப் படைகளால் இன அழிப்புக்கு உள்ளான; 21ஆம் நூற்றாண்டின் உலக இனப்படுகொலை தினத்தை ஈழத்திலும் தமிழகத்திலும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வலிசுமந்த நினைவாக நினைவேந்தல் செய்கின்றனர். இந்நாளில் முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின அழிப்புக்கான நீதியை வழங்குமாறு உலக நாடுகளையும், உலக அமைப்புக்களையும், உலக மக்களையும் தொடர்ந்தும் கோரவுள்ளனர். அதே நேரம் இந்த இன அழிப்பில் இனப் படுகொலை செய்யப்பட்ட மக்களையும், தங்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும் வணங்கிப் போற்றும் நிகழ்வாகவும் ஈழத்தமிழ் மக்கள் இந்நாளை முன்னெடுக்கின்றனர்.

இந்நேரத்தில் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கான நீதியை வழங்குவதில் உலக நாடுகளும், அமைப்புக்களும், உலகின் மக்களும் காட்டி வரும் காலதாமதம், சிறீலங்கா தான் அனைத்துலகச் சட்டங்களில் இருந்து தப்புவதற்காக, ஒருநாட்டுக்குள் இருதேசங்களாக உள்ள தமிழ், சிங்கள மக்களின் இறைமைகளைச் சீனாவின் இறைமையுடன் இணைக்கின்ற வர்த்தக கடன் ஒப்பந்தங்கள் வழி, தனக்கான பாதுகாப்புச் சுவரைக் கட்டி எழுப்பும் தந்திரோபாயத்தில் பலம் பெறுவதற்கான கால அவகாசத்தை வழங்குகிறது. சிறீலங்காவின் இந்த உலக சத்திகளை நடுநிலைப்படுத்திச் செயற்படாத தந்திரோபாயம், இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள இந்துமா கடலின் அமைதியினையும், பாதுகாப்பினையும் சீர்குலைத்து அதனை வல்லாண்மைகளின் போட்டிக் களமாக, மூன்றாம் உலகப் போருக்கான களமாக மாற்றிக்  கொண்டிருக்கிறது.

இவ்விடத்தில், டேவிட் லோகன் கேட்டர் என்னும் ஆய்வாளர், “மூன்றாவது உலகப் பெரும்போர்: இது ஏற்கனவே தொடங்கி விட்டதா?” (World War 3 : Is it already happening?), என 1ஆம், 2ஆம் உலகப் பெரும் போர்களுக்கான காரணங்களையும், சமகால உலக அரசியல் போக்கையும் எடுத்து ஆராய்ந்து, எழுப்பியுள்ள கேள்வி சிந்தனைக்குரியது. இதில் 1ஆவது உலகப் போரின் விளைவாகவே 2ஆவது உலகப் போர் தொடர்ந்தது என்பதையும், இரண்டாவது உலகப் போரின் விளைவாக இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு மூன்றாவது உலகப்போர் வளர்ந்து செல்கிறது என்பதையும் தெளிவாக்கியுள்ளார்.

சீனா இன்று அதனது போர்க் கலைத் தத்துவாசிரியர் சன் டிசூ அவர்களின் “யுத்தத்தின் மேன்மையான போரிடல் கலை என்பது எதிரியுடன் போரிடாது அடக்குவது” என்ற தந்திரோபாயத்தின் மூலம் செயற்பட்டு வருகின்றது எனவும், இது மூன்றாவது உலகப் போர் ஏற்கனவே தொடங்கி விட்டதை உணர்த்துகிறது எனவும் தனது ஆய்வில் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த 21ஆம் நூற்றாண்டுப் போர் முறையில் போர் செய்யாது எதிரியை அடக்கும் போராகவே போர்கள் முன்னெடுக்கப்படும். ஏனெனில் அணுக் குண்டின் தந்தையான விஞ்ஞானி அல்பேர்ட் அயன்ஸ்டின் “மூன்றாவது உலகப் போர் எந்த ஆயுதங்களால் நடத்தப்படும் என எனக்குத் தெரியும். ஆனால் நான்காவது உலகப்போர் தடிகளாலும் கல்லுகளாலுமே நடத்தப்படலாம்” எனக் கூறிய எச்சரிப்பை எல்லா வல்லாண்மைகளும் நன்கறியும்.

இந்த வகையில்தான் சிறீலங்காவுக்கான கடன்கள் வர்த்தகங்கள் வழி சீனா  தனது இறைமையை இலங்கைத் தீவில் அதனை ஆக்கிரமிக்காமலே ஆக்கிரமித்து நிறுவிக் கொண்டுள்ளது. இன்று சீனாவும், கொங்கொங்குமே சிறீலங்காவின் நேரடி முதலீடுகளில் முதலிரு இடங்களையும் பெறுகின்றனர். இந்தியாவுக்கும், பிரித்தானியாவுக்கும் இருந்த இடங்கள் பின்தள்ளப்பட்டு விட்டன. இவ்வாறு தனது பாரம்பரிய முதலீட்டாளர்களிடம் இருந்து விலகிச் சீனாவிடம் இலங்கைத் தீவின் இறைமையைச் சிறீலங்கா பகிர்ந்து கொள்வதற்குக் காரணம், சிறீலங்கா தனது ஈழத் தமிழர்களின் மேலான இன அழிப்புத் திட்டத்தை அனைத்துலகச் சட்டங்களும் அமைப்புக்களும் தடுக்காது தப்பித்துக் கொள்வதற்கே.

ஆகையால் உலக நாடுகளும், அமைப்புக்களும் ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வை விரைவுபடுத்துவதன் மூலமே சீனாவுடனான சரிவுநிலையில் இருந்து இலங்கைத் தீவை மீட்டு, இந்துமா கடலின் அமைதித் தன்மையைப் பேண முடியும். அதேவேளை எந்த நாடும் உலகின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிப்படுத்த அனைத்துலக அமைப்புக்கள் மூலமே சிறீலங்காவினுள் செயற்பட முடியும் என்பது இன்றைய ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். இதற்காகவே சிறீலங்கா அனைத்துலக மனித உரிமைகள் ஆணையகத்தின் வழிகாட்டலை நிராகரித்து தன்னைத் தனிமைப் படுத்துகின்றது.

இந்நிலையில் அனைத்துலக நாடுகளும், அமைப்புக்களும் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு ஈழத் தமிழர்களுக்கு, அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைய நேரடித் தொடர்புகளை மேற்கொள்வதற்கான பிரதிநிதித்துவத்தைப், பாலஸ்தீன மக்களுக்கு அவர்கள் இஸ்ரேயல் என்னும் நாட்டுக்குள் இருக்கும் நிலையிலேயே வழங்கி வருவது போல, வழங்குவது அவசியம். மேலும் நாட்டுக்குள் தேசங்கள் என்ற அடிப்படையில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுக்கு அனைத்துலகச் சட்டங்களுக்கு ஏற்புடையனவற்றைச் செய்யுமாறு ஈழத்தமிழர் பிரச்சினையில் நேரடித் தொடர்புடைய பிரித்தானியா, இந்தியா உட்பட்ட உலக நாடுகளிடம் ஈழமக்கள் தொடர்புகளை மேற்கொண்டு உரையாடல்களைத் தொடங்க வேண்டும். அப்பொழுது தான் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கான நீதி என்பது இன்றைய உலகின் பாதுகாப்புக்கும், அமைதிக்குமான தேவை என்பதை இந்நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துரைக்க முடியும்.

Exit mobile version