Tamil News
Home செய்திகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் 17.05.2021 அன்று உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அன்று இரவு 11 மணிமுதல்  முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை ஆகிய மூன்று காவல்துறை பிரிவுகளும் முடக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகளிலும் எல்லா கிராம அலுவலர் பிரிவுகளிலும் தொற்றாளர்கள் இருந்த போதும் இன்று மீண்டும் நாடளாவிய பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுவதால் மக்களின் அத்தியாவசிய தேவைகள் கருதி முடக்கத்தில் இருந்து அதிக தொற்றார்கள் இனங்காணப்பட்ட 11 கிராம அலுவலர் பிரிவுகளை தவிர்த்து முடக்கப்பட்ட 65 கிராம அலுவலர் பிரிவுகளில் மீதி 54 கிராம அலுவலர் பிரிவுகளை விடுவிக்க நேற்று முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சிபார்சு செய்திருந்தார்.

அதனடிப்படையில் முடக்கப்பட்ட மூன்று காவல்துறை பிரிவுகளில் 11 கிராம அலுவலர் பிரிவுகளை தவிர ஏனையவை இன்று விடுவிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவில் தேவிபுரம், புதுக்குடியிருப்பு மேற்கு, புதுக்குடியிருப்பு கிழக்கு, மல்லிகைத்தீவு, மந்துவில், கோம்பாவில் உடையார்கட்டு வடக்கு, உடையார்கட்டு தெற்கு, வள்ளிபுனம் ஆகிய 9 கிராம அலுவலர் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்படும் அதேவேளை ஏனைய 10 கிராம அலுவலர் பிரிவுகளும் விடுவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளும் விடுவிக்கப்பட்டுள்ளது. முள்ளியவளை பொலிஸ் பிரிவில் முள்ளியவளை வடக்கு, முள்ளியவளை மேற்கு ஆகிய இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளை தவிர ஏனைய அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட பகுதிகளிலும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தவிர்ந்த ஏனைய பொதுமக்கள் அடையாள அட்டை நடைமுறைக்கு அமையவே நடமாட முடியும் அந்தவகையில் 21.05.2021 இன்று அடையாள அட்டை இலக்கத்தின் இறுதி இலக்கமாக 1,3,5,7,9 ஆகிய இலக்கங்கள் உள்ளவர்களே நடமாட முடியும்.

21.05.2021 இன்று இரவு 11 மணிமுதல் மீண்டும் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு 25.05.2021 அதிகாலை 4 மணிவரை நடைமுறையில் இருக்கும் மீண்டும் 25.05.2021 இரவு 11 மணிமுதல் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு 28.05.2021 அதிகாலை 4 மணிவரை நடைமுறையில் இருக்கும்.

எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணி கொரோனா தொற்று பரவலை தடுக்க கூடிய வகையில் பொறுப்புடன் செயற்படுமாறு மக்களிடம் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version