Tamil News
Home செய்திகள் முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு உடையணிந்து போராட்டம்

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு உடையணிந்து போராட்டம்

உலக மகளீர் நாளை முன்னிட்டு  முல்லைத்தீவு மாவட்டத்தில்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு உடையணிந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 2017 மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது நான்கு ஆண்டுகளை கடந்து இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அவர்களுடைய தொடர் போராட்டத்திற்கு இன்றுவரை நீதி கிடைக்காத நிலையில் “இன்று   உலக மகளீர் நாளில் நாம் வீதிகளில் தொடர்ச்சியாக போராடி வருகிறோம். ஆனால் இந்த அரசாங்கம் அதற்கான எந்தவித பதிலையும் வழங்கவில்லை“ என தெரிவித்து மகளீர் நாளை துக்க தினமாக அனுஷ்டித்து “எமது உறவுகளுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கே என்கின்ற நீதியான விடயங்கள் கிடைக்கப்பெற சிறீலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும்“ என தெரிவித்து இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் , இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து,மகளிர் தினம் எமக்கு துக்கத்தினம் போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் சர்வதேசமே நீதி உன்னிடமே தெற்கில் சுதந்திரம் வடக்கில் அடக்குமுறை இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே ,சர்வதேசமே இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்து உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version