Tamil News
Home உலகச் செய்திகள்  மும்பை உயர் நீதி மன்றம் வழங்கிய விநோத தீர்ப்பு – தேசிய மகளிர் ஆணையம் வழக்கு

 மும்பை உயர் நீதி மன்றம் வழங்கிய விநோத தீர்ப்பு – தேசிய மகளிர் ஆணையம் வழக்கு

ஆடைகளோடு குழந்தைகள்/ சிறுமிகளின் மார்பகத்தை தொடுவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது என்று மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆடைகள் இல்லாமல் குழந்தைகள் மார்பகத்தை தொடுவது, அதாவது நேரடியாக உடலில் கை வைக்காமல் இருந்தால் வெறும் இந்திய தண்டனை சட்டம் 354 (IPC 354 – Outraging a woman’s modesty. அதாவது, ஒரு பெண்ணுடைய அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல்) கீழ்தான் வரும் என்றும் கடும் தண்டனை விதிக்கப்படும் போக்ஸோவுக்கு கீழ் வராது என்றும் அந்த தீர்ப்பு குறிப்பிடுகிறது.

இத்தீர்ப்பு குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வட்டாரங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதே நேரம் மும்பை உயர் நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடுக்க இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது.

வழக்கின் பின்னணி

2016ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி காலை 11.30 மணியளவில் செல்வி (அப்போது வயது 12, பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொய்யாப்பழம் வாங்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் செல்வி திரும்பி வராததால் அவரது தாய் செல்வியை தேடிச் சென்றுள்ளார்.

அப்போது வீட்டருகே வசிக்கும் நபர் ஒருவர் செல்வியை சதீஷ் (வழக்கின் குற்றவாளி, வயது 39) அழைத்து சென்றதாகக் கூறி அவரது வீட்டையும் காண்பித்துள்ளார். வீட்டிற்குள் செல்வியின் தாய் சென்ற போது சதீஷ் மாடியில் இருந்து கீழே இறங்கி வருவதை பார்த்துள்ளார். தனது மகள் குறித்து கேட்டதற்கு இங்கு அப்படி யாரும் இல்லை என்று கூறியுள்ளார் சதீஷ்.

கீழ்தளத்தில் தனது மகளை தேடிவிட்டு மாடியில் உள்ள அறைக்கு சென்றார் செல்வியின் தாய். அங்கு வெளியே தாழிடப்பட்டிருந்த அறையை திறந்த போது அங்கு செல்வி அழுது கொண்டிருந்ததை தாய் பார்த்துள்ளார். அறையில் இருந்து வெளியே அழைத்து வந்து, என்ன நடந்தது என்று குழந்தையிடம் விசாரித்தபோது, “கொய்யாப்பழம் தருவதாக கூறி தன்னை அவரது வீட்டிற்கு சதீஷ் அழைத்து வந்ததாகவும், அங்கு தன் மார்பகங்களை அழுத்தி, ஆடைகளை கழற்ற முயன்றதாகவும்” செல்வி விவரித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து செல்வியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் கொடுத்துள்ளார் அவரது தாய். பின்னர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேற்கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை.

தன் கையை பிடித்து கொய்யாப்பழம் தருவதாக அவரது வீட்டிற்கு அழைத்து சென்ற சதீஷ் தன் ஆடையை கழற்ற முயன்று, மார்பகங்களை தொட்டதாகவும், தான் கத்திய போது, வாயை கையால் அடைத்ததாகவும் செல்வி அன்றே சாட்சியம் அளித்தார்.

இந்த வழக்கில் கடந்தாண்டு தீர்ப்பளித்த நாக்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம், இந்திய தண்டனை சட்டம் 354,363 மற்றும் 342, அதோடு போக்ஸோ சட்டம் பிரிவு 8 ஆகியவற்றின் கீழ் சதீஷுக்கு தண்டனை வழங்கியது.

போக்ஸோ சட்டம் பிரிவு 8 படி, மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும், ஐபிசி 342ன் படி ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும் 500 ரூபாய் அபராதமும், ஐபிசி 363 படி இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார் சதீஷ்

இந்த வழக்கின் தீர்ப்பின் போதே ஆடைகளோடு குழந்தைகள்/ சிறுமிகளின் மார்பகத்தை தொடுவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க வழி வகுக்கும் என்று தெரிவித்துள்ள குழந்தைகள் நல செயற்பட்டாளரும், பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சென்னையை சேர்ந்த நாதர்ஷா மாலிம், போக்ஸோ சட்டத்தின் முக்கிய நோக்கமே குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகள் மற்றும் குற்றங்களை குறைத்து அவர்களை பாதுகாப்பதுதான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடுக்க இருப்பதாக கூறியுள்ள தேசிய மகளிர் ஆணையம், “இந்த தீர்ப்பு பெண்களின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட பல்வேறு விதிகளில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அனைத்து பெண்களையும் கேலிக்குள்ளாக்குகிறது. பெண்களின் பாதுகாப்புக்காக சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள விதிகளையும் அர்த்தமற்றதாக்கியுள்ளது.” என்று தேசிய மகளிர் ஆணையம் தன் ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

போக்ஸோ (protection of children from Sexual offences) சட்டம்- இது இந்தியாவில் குழுந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்க உருவான சட்டம். இந்த சட்டம் 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. போக்ஸோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8 படி, குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது, அல்லது மற்றவர்களின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொட வைப்பது குற்றம். அதாவது பாலியல் சீண்டல்கள் செய்வது. இதில் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். அபராதமும் உண்டு.

Exit mobile version