முப்பது ஆண்டுகளின் பின் கையளிக்கப்படும் ஏழு குவைத்தியர்களின் உடல் எச்சங்கள்

தொண்ணுறுகளில் குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பின் போது காணாமல் போனவர்களை தேடும் முயற்சியின் பலனாக, காணாமல் போன குவைத் மற்றும் பிற தேச குடிமக்கள் என கருதப்படும் ஏழு பேரின் சடலங்கள் அண்மையில் குவைத்திடம் கையளிக்கப்பட்டன.

ஈராக் அரசாங்கத்திலிருந்து குவைத் அரசுக்கு கடந்த ஒரு வருட காலத்தில் மேற்படி குவைத் குடிமக்கள் என நம்பப்படும் மனித எச்சங்களை திருப்பி அனுப்புவதற்கு ஈராக்கிற்கான ஐக்கிய நாடுகளின் உதவித் திட்டம் (UNAMI)  ஆதரவை வழங்கி வருகிறது.

ஈராக் ஆக்கிரமிப்பின் பொது நூற்றுக் கணக்கானோர் காணாமல் போயிருந்ததாக குவைத் தெரிவித்து வருகிறது இவற்றில் 48 சடலங்கள் அடைந்த வருடம் ஆகஸ்ட் மாதமளவில் கையளிக்கப் பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் ஈராக் மற்றும் குவைத் இடையே நடந்து வரும் ஒத்துழைப்பை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் வரவேற்றனர்.

காணாமல் போன குவைத் மற்றும் பிற நாட்டு பிரஜைகள் தொடர்பான நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக 2013 இல் கொண்டுவரப்பட்ட 2107 வது தீர்மானத்தை அமுல்படுத்துவதில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) முத்தரப்பு கலந்துரையாடல்  பொறிமுறை பங்களிப்பை வழங்கியிருந்தது.

மீதமுள்ள அனைத்து குவைத் சொத்துக்களையும் திருப்பித் தர ஈராக் அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை ஐ. நா பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளதுடன் காணாமல் போன சொத்துக்கான தேடலைத் தொடர ஈராக் அரசாங்கத்தை கோரியுள்ளது. குறிப்பாக காணாமல் போன குவைத் தேசிய தொல்பொருள் உடைமைகள் தேடலை மீண்டும் புதுப்பிக்க கோரியுள்ளதுடன்,  பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை மீண்டும் வலியுறுத்தி, இழந்த உயிர்களுக்கு இரங்கலையும் தெரிவித்தனர்.

ஈராக் அதிகாரிகளால் குவைத்துக்கு மாற்றப்பட்ட மனித எச்சங்களை முழுமையாக அடையாளம் காண குவைத் தடயவியல் குழுவின் பணிகள் தொடரும் அதே வேளை உறுதிப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

இந்நிகழ்வு மனிதாபிமானம், மனித உரிமைகள் சர்வதேச அழுத்தங்கள், பேச்சுவார்த்தைகள் முடிவுகள் என்பவற்றின் போக்கையும் நீதி வழங்கலுக்கான கால நீட்சியையும் காட்டி நிற்பதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அங்கலாய்க்கின்றனர்.