மறைந்த முன்னாள் மன்னார் ஆயர் – ‘சிறிலங்காவின் ஒஸ்கார் றொமேறோ’ – தமிழர் மரபுரிமைப் பேரவை

பின் முள்ளிவாய்க்கால் சமூக-அரசியல் வரலாற்று தளத்தில் தமிழின இனப் படுகொலை தொடர்பில் உண்மையைக் எடுத்துக்கூறி நீதிக்காகப் போராடிய மாமனிதரின் இழப்பு என்பது தமிழினத்திற்கும், சர்வதேசத்திற்கும் என்றுமே ஈடுசெய்யப்பட முடியாத இழப்பாகும் என தமிழர் மரபுரிமைப் பேரவை (முல்லைத்தீவு) வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் ஒஸ்கார் றொமேறோ,மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர்
அதி வந்தனைக்குரிய கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கான அஞ்சலிக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ள தமிழர் மரபுரிமைப் பேரவை,

WhatsApp Image 2021 04 03 at 12.19.57 PM மறைந்த முன்னாள் மன்னார் ஆயர் - 'சிறிலங்காவின் ஒஸ்கார் றொமேறோ' - தமிழர் மரபுரிமைப் பேரவை

“மதங்களைக் கடந்து தமிழின விடுதலைக்காக, சிறிலங்கா அரச அடக்குமுறைக்கெதிராக ஓங்கி ஒலித்த குரல் விடுதலை இறையியல் மரபில் தனது குருத்துவப்பணியின் அழைப்பை புரிந்து கொண்ட ஆயரின் பணி யுத்தத்தின் கொடூரங்களுக்கு மத்தியில், தானே தமிழின இனப்படுகொலையின் சாட்சியமாய் வாழ அழைக்கப்பட்ட போது, அதை விருப்புடன் ஏற்று, வாழ்ந்து, இன்று அதை மக்கள் மயப்படுத்திவிட்டு வித்தானார்.

ஈழத்தமிழினத்தின் தாயகம், தேசியம், சுயநிர்ணக் கோரிக்கைகளை, தமிழினத்திற்குரிய அரசியல் தீர்வாக தொடர்ந்தும் கூறிய ஆயர் அவர்கள், தமிழினப் படுகொலைக்கும் வடக்கு-கிழக்கில் நடந்தேறிய திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கும் சிறிலங்கா அரசே பொறுப்பு என்ற உண்மையை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறியதன் விளைவாக பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு அரச இயந்திரத்தின் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் பலமுறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். நீதி தவிர்ந்த அல்லது அந்நியப்படுத்தப்பட்ட சூழலில் நல்லிணக்கம் அசாத்தியமானது என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.

இலத்தீன் அமெரிக்காவில், எல்சல்வடோர் நாட்டு அரச அடக்குமுறைக்கெதிராக மக்கள் விடுதலையை மையப்படுத்தி எவ்வாறு பேராயர் ஒஸ்கார் றொமேறோ உருவானாரோ, அதே சமூக-அரசியல் வரலாற்றுச் சூழலில் சிறிலங்காவின் ஒஸ்கார் றொமேறோவாக, தமிழ் மக்களின் கூட்டுரிமைக்காக, சிங்கள-பௌத்தமயமாக்கலுக் கெதிராக, வடக்கு-கிழக்கு நில ஆக்கிரமிப்பிற்கெதிராக, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிற்கெதிராக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதி தொடர்பில் உண்மையைத் தேடி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி, வடக்கு-கிழக்கு இராணுவமயமாக்கலுக்கெதிராக, தமிழின இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணையை நிராகரித்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஈழத்தமிழினத்தின் விடுதலைக்குரலாய் ஓங்கி ஒலித்த ஆயரின் பணியை தொடர்ந்து முன்னெடுப்பதே நாம் அவருக்கு செய்யும் நன்றிக் கடனாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.