முட்டாள்தனமான,ஆபத்தான பரிந்துரை; ட்ரம்ப் மீது பாய்ந்த மருத்துவ நிபுணர்கள்

கொரோனா வைரஸ் சிகிச்சையாக மனித உடலில் ரசாயன கிருமிநாசினிகளை செலுத்த முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்று  நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இது மிக முட்டாள்தனமான, அதேசமயம் மிக ஆபத்தான பரிந்துரை என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

‘அப்படியொரு கிருமிநாசினி கண்டிபிடிக்கப்பட்டு கரோனாவால் பாதிக்கப்பட்டவர் அதைக் குடித்தால், அவர் கரோனாவால் இறப்பதற்கு முன்பே அந்தக் கிருமிநாசினியால் இறந்திருப்பார்’ என்று இங்கிலாந்திலுள்ள University of East Anglia மருத்துவப் பேராசிரியர் போல் ஹண்டர் தெரிவித்துள்ளார்.

மேலும், ட்ரம்ப்  பேச்சைக் கேட்டு மக்கள் யாரும் கிருமிநாசினியைக் குடித்துவிட வேண்டாம். அது கூடுதல் ஆபத்தை விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏற்கெனவே கொரோனா வைரஸ்தொடர்பாக மிக அலட்சியமாக நடந்து வந்ததாக ட்ரம்ப் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சூழலின் தீவிரத்தை உணராமல், அவர் பொறுப்பற்றுப் பேசி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உலகளாவிய அளவில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மிக அதிக அளவில் பரவியுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்குகிறது. 50,372 பேர் இறந்துள்ளனர். 82,843 பேர் குணமாகியுள்ளனர்.