முக்கியமான ஏழு மாதங்கள்

2021ஆம் ஆண்டு யூன் முதலாம் திகதியுடன் இவ்வாண்டுக்கான அடுத்த ஏழு மாதங்கள் ஆரம்பமாகப் போகிறது. தொடரவிருக்கும் இந்த ஏழு மாதங்களும் ஈழத் தமிழர்களின் உரிமைகளை மீட்டல் என்னும் இலக்கு நோக்கிய பயணத்தில் அதிமுக்கியமான மாதங்களாக அமையப் போகின்றன. காரணம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வு நிறைவேற்றிய சிறீலங்கா குறித்த தீர்மானத்தின் படி  மனித உரிமைகள் ஆணையகம் சிறீலங்காவின் யுத்தக் குற்றச் செயல்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை வன்முறைப்படுத்தல்கள் தொடர்பான சான்றாதாரங்களையும், சாட்சியங்களையும் திரட்டவென ஒதுக்கப்பட்ட நிதியில், இதற்கான தனியான அலுவலகம் ஒன்றை அமைத்துச் செயற்படுவதற்கான நடை முறைகளைத் தொடங்கியுள்ளது.

இந்த அலுவலகம் 2022ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் வாய்மொழி அறிக்கையையும், 2023ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் எழுத்துருவ ஆவணத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் வெளியிட வேண்டும். இவற்றின் அடிப்படையில் எத்தகைய அனைத்துலக முறைமையினைச் சிறீலங்கா மேல் மனித உரிமைகள் ஆணையகம் நெறிப்படுத்திச், சிறீலங்கா பொறுப்புக் கூறல், வெளிப்படைத் தன்மை, மனித உரிமைகளைப் பேணுதல் என்பன இல்லாமல், தன்னிச்சையாகச் செய்து வரும் அனைத்துலகச் சட்ட மீறல்களை எவ்வாறு கட்டுப்பாட்டினுள் கொண்டு வரலாம் என்பதற்கான செயல் முறையைத் தொடங்க வேண்டும்.

இதனை ஐக்கிய நாடுகள் சபை, அரசைக் குற்ற விசாரணைக்கு உட்படுத்தாது அவ் அரசில் அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களின் குற்றச் செயல்களை  விசாரிப்பதற்கான தனிப்பட்ட விசாரணைக் குழுவை அமைப்பதால் செய்யலாம். அல்லது அரசின் அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்களுக்காக அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துமாறு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நெறிப்படுத்தல் வழி செய்யலாம்.

முதலாவது நிலையில்,  அரசுக்கான குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கான நெறிப்படுத்தலுக்கு உறுப்புரிமை நாடுகளின் போதிய ஆதரவு இல்லாத நிலையில், அனைத்துலகச் சட்டத்தை மீறியவர்களைப் பெயரிட்டு அவமானப்படுத்தல் என்ற நீதிமுறைமையின் மூலம் அனைத்துலகச் சட்டங்கள் வழி அவ் அரசு செயற்படுவதற்கான அழுத்தத்தை அரசுக்கு ஏற்படுத்துதல்  என்பது நோக்காக அமையும். இரண்டாவது நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகளின் போதிய ஆதரவு இருக்கும் இடத்து, பொதுச்சபைக்கு அவ் அரசினை நெறிப்படுத்துவதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்து, சாதாரண மேலதிக வாக்குகளால் நிறைவேற்றிச் செயற்படுத்தலாம். இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருவதை வீட்டோ அதிகாரம் என்னும் விலக்கல் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமை நாடுகள் தடுக்கவியலாது. இது சாத்தியப்படாத இடத்து, மனித உரிமைகள் ஆணையகம், ஐக்கிய நாடுகள் சபையின் ஏதாயினும் இருநாடுகளின் முன்மொழிவின் வழி அவ் அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துமாறு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தைக் கோரலாம்.

இவைகள் எல்லாமே அரசுகளுடனான இராஜதந்திரத் தொடர்பாடல்கள் வழியாகச் செயற்படுத்தப்பட வேண்டிய மிக நுட்பமான விடயங்கள். ஏனெனில் ஒரு நாட்டின் இறைமையை மீறி அந்நாட்டின் விடயங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடுதல் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கல் சட்டங்களால் மிக கடுமையான முறையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கூடவே ஐக்கிய நாடுகள் சபைக்கு நிதிப் பங்களிப்பு செய்யும் நாடுகளின் மனங் கோணாதபடி நடக்க வேண்டிய சிக்கல் நிலையும் உள்ளது. கூடவே உலக அரசியல் ஒழுங்கு முறையில் வல்லாண்மை பிராந்திய மேலாண்மை நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொண்டு செயற்பட வேண்டிய தேவைகளும் உள்ளது. இதனால் தான் ஐக்கிய நாடுகள் சபைக்கு உண்மைகள் தெரிந்த நிலையிலும் அவற்றுக்கான ஏற்புடைய தீர்வு என்பது உடனடியாக நடைமுறைச் சாத்தியமில்லாத நிலை தொடர்கிறது. இவ்விடத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் பாதிப்புக்கள் குறித்த மிக அதிகளவிலான பதிவுகளையும், சான்றாதாரங்களையும் மனித உரிமைகள் ஆணையகத்தில் பதிவு செய்தல் வழியாக மட்டுமே இந்தச் சிக்கல்களைத் தாண்டி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் தனது பொறுப்புக்களையும் நெறிப்படுத்தல்களையும் முன்னெடுக்க முடியும்.

இதனைச் செய்யாது பாதிக்கப்பட்டவர்கள் ஐக்கிய நாடுகள் சபையினைக் குற்றம் சொல்லிக் கொண்டு, உலக முறைமையில் இருந்து விலகுவது என்பது எவ்வகையிலும் அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்காது. இவ்விடத்தில் தான் அடுத்து வரும் ஏழு மாதங்களும் ஈழத் தமிழர்களுக்குத் தங்கள் அரசியல் உரிமைகளை வென்றெடுத்தல் என்னும் இலக்கில் முக்கியமான மாதங்களாகத் திகழப் போகின்றன. ஈழத் தமிழர்களுக்குச் சிறீலங்காவால் ஏற்படுத்தப்பட்ட – ஏற்படுத்தப்படுகிற ஒவ்வொரு பாதிப்புக்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவாக்கப்படல் வேண்டும். ஏற்கனவே பதியப்பட்டவைகளுக்குக் கூட அவற்றை வலுப்படுத்தும் மேலதிக தரவுகள், சான்றாதாரங்கள் சேர்க்கப்பட்டு, மேலும் வலுவூட்டப்படல் வேண்டும். தாயகத்தில் வாழ்பவர்கள் மட்டுமல்ல, உலகின் எங்கு வாழ்ந்தாலும் அவர்களும் இந்த தகுந்த சான்றாதரங்களுடன் உள்ள சிறீலங்காவின் அனைத்துலகக் குற்றச் செயல்களைப் பதிவு செய்தல் மிக அவசியம். இப்பதிவுகள் ஈழத் தமிழர்களின் பாதிப்புக்களை உலக மக்கள் சான்றாதாரத்துடன் அறிந்து ஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கான வரலாற்றுப் படுத்தலாகவும் இரட்டைப் பயன் தரவல்லன. வியட்னாம் போரிலும், தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்திலும், தகவல்களைப் பதிவுகள் வழி அறிந்த உலக மக்களின் எழுச்சியே அவற்றுக்கான தீர்வை உருவாக்கின என்பது உலக வரலாறு.

இவற்றைச் செய்வதற்கான பொறி முறைகளை உலகெங்கும் உருவாக்குதல் முதல் வேலைத் திட்டம்.  தங்களுடைய தமிழர் தேசியப் பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் எல்லா உறுப்புரிமை நாடுகளின் ஆதரவைப் பெறுதலுக்கான நட்பு உரையாடல்களை நாடுகளுடன் வளர்த்தல் இரண்டாவது வேலைத் திட்டம்.  இந்த இரு வேலைத் திட்டங்களிலும் தாயகத் தமிழர்களும், உலகெங்கும் புலம்பதிந்த தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், தங்களிடை உள்ள விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒருங்கிணைந்து செயற்பட்டாலே ஈழத் தமிழர்களின் உரிமைகளை மீட்டல் என்னும் இலக்குக்குச் சாத்தியமான முறையில்  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தால் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்பதை இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.