முகமாலையில் செவ்வாய்கிழமை அகழ்வுப் பணி; நீதவான் உத்தரவு

முகமாலையில், கண்ணிவெடி அகற்றும் பகுதியிலிருந்து, பெருந்தொகை எலும்புக்கூடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடைய சீருடைகள் மற்றும் துப்பாக்கிகள் சிலவும் நேற்று மீட்கப்பட்டுள்ள நிலையில், இவ்விடடத்தில் அகழ்வுப் பணிகள் செவ்வாய்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதைகுழி தொடர்பில், பொலிஸாருக்குக் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் நிறுவன பணியாளர்களால் தகவல் வழங்கியதை அடுத்து அவ்விடத்துக்குச் சென்ற பளை பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவ்விடத்துக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் த.சரவணராஜா, இம்மாதம் 26ஆம் திகதியன்று, குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த எலும்புக்கூடுகள், விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், எலும்புக்கூடுகள் மற்றும் சீருடைகள் மீட்கப்பட்ட இந்தப் பகுதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்கக் காவலரண் அமைந்த பகுதி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.