Tamil News
Home உலகச் செய்திகள் மீனவர்கள் படகை தாக்கி மூழ்கடித்த இலங்கைக் கடற்படை, 4மீனவர்களைக் காணவில்லை: வைகோ கண்டனம்

மீனவர்கள் படகை தாக்கி மூழ்கடித்த இலங்கைக் கடற்படை, 4மீனவர்களைக் காணவில்லை: வைகோ கண்டனம்

புதுக்கோட்டையிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் மோதி கடலில் மூழ்கடித்ததால் 4 மீனவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
“பாகிஸ்தான் மீது கொலைவெறிக் கோபம் காட்டுகின்ற இந்தியா, தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கின்ற இலங்கையின் சிங்கள இனவெறி அரசை அரவணைத்து முதுகில் தட்டிக் கொடுக்கின்றது என்றும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

“புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து ஜன.18 அன்று, 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன.

இதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான INDTN10MM 0646 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகும் சென்றது.

  1. மெசியா (30), த/பெ அந்தோணி ராஜ், தங்கச்சிமடம்,
    2. நாகராஜ் (52), த/பெ வெள்ளைச்சாமி, வட்டவளம் , உச்சபுளி,
    3. சாம் (28), த/பெ நேச பெருமாள், மண்டபம்,
    4. செந்தில்குமார் (32), த/பெ செல்வம், உச்சிப்புளி, ராமேஸ்வரம்

ஆகிய நான்கு மீனவர்களும் அந்தப்படகில் சென்றனர்.

எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கைக் கடற்படையின் இரண்டு படகுகள் சீறிப் பாய்ந்து வந்து, மேற்கண்ட படகு மீது முட்டி மோதின. படகு மூழ்கத் தொடங்கி விட்டது என்று, அந்த மீனவர்கள் வாக்கி டாக்கியில் எழுப்பிய அலறல் குரல், மற்ற படகில் இருந்த மீனவர்களுக்குக் கேட்டது. அதன் பிறகு அவர்களிடம் இருந்து, எந்தத் தகவலும் இல்லை.

நேற்று ஜன.19 காலை 10.30 மணிக்குக் கரை திரும்ப வேண்டியவர்கள், இதுவரை கரைக்கு வந்து சேரவில்லை. விசைப்படகைத் தேடி மூன்று விசைப்படகுகளில் 12 மீனவர்கள் சென்றுள்ளார்கள். நம்பிக்கை அளிக்கின்ற எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் மீனவர் குடும்பங்கள் கண்ணீரில் பரிதவிக்கின்றன.

அவர்களை நாங்கள் பிடித்துச் செல்லவில்லை என்று,  இலங்கை கடற்படை கூறுகின்றது. அவர்களுடைய தொடர் தாக்குதல்களில் இருந்து, தமிழக மீனவர்களை இந்தியக் கடற்படை காப்பாற்றவில்லை. கடந்த வாரம் இலங்கைக்குச் சென்ற இந்திய அயல்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கே சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

இனி அதற்குத் தேவை இல்லை, கைது செய்யப் போவது இல்லை, கடலுக்குள் மூழ்கடித்து விடுவோம் என்று இலங்கை காட்டி இருக்கின்றது. பாகிஸ்தான் மீது கொலைவெறிக் கோபம் காட்டுகின்ற இந்தியா, தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கின்ற இலங்கையின் சிங்கள இனவெறி அரசை அரவணைத்து முதுகில் தட்டிக் கொடுக்கின்றது.

நாங்களும் தமிழர்களுக்கு எதிரிதான் என்பதைக் காட்டுகின்றது. காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன என்பதை, இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” என வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து,மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகொன்று,  கடற்படையின் படகை தாக்கி சேதப்படுத்திவிட்டு  யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என இலங்கை கடற்படை நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version