மீண்டு வருமா மீனவர் வாழ்வு?

உலகின் பிரதானமான பல தொழில்களில் மீன்பிடித்தல் தொழிலும் வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு தொழிலாகும். உலகில் வாழும் மக்களின் 60-70 சதவீதமானோரின் வாழ்வாதாரம் கரையோரத்திலும், கரையோர மூலவளங்களிலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் தங்கியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக கரையோர வளங்களில் மீன்வளமானது புதுப்பிக்கக் கூடிய வளமாகும். இவ்வளம் சமூக, பொருளாதார விடயத்தில் பாரிய பங்களிப்புச் செய்கிறது. மீன்பிடி வருமானத்தையே முற்று முழுதாக நம்பி வாழ்கின்ற சமூகமாக மீனவ சமூகம் காணப்படுகின்றது.

இலங்கையின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதில் மீன்பிடி மிகவும் முக்கிய இடத்தை வகிக்கிறது. இலங்கைக் கரையோரத்தின் மிகவும் பிரதான வளமாக கடல் வளம் காணப்படுவதோடு, நாட்டு மக்களின் உணவுத் தேவைகளையும் நிறைவு செய்கிறது. மீன்பிடியை தொழிலாகக் கொண்டு வாழ்கின்ற கடற்கரையோர மக்கள் பல சமூக, பொருளாதார பின்னடைவுகளைக் கொண்டு வாழ்கின்றனர்.

1200px Fishing மீன்பிடி மீண்டு வருமா மீனவர் வாழ்வு?

மீன்பிடித்தல் பாரம்பரியத் தொழில். இன்று அது பெரு வணிகமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பாரம்பரிய மீன்பிடிக்கும் முறைகள் உருமாறி, இன்று நவீன வலைகளும், இயந்திரப் படகுகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் மீன்பிடிப்பதை மீனவ சமுதாயம் மட்டுமே இன்றும் முன்னெடுத்து வருகிறது. கடலோடு மீனவர்களுக்கு உள்ள உறவு கடவுளோடு உள்ள உறவைப் போன்றதாகும். எப்போது அள்ளித்தரும், எப்போது காவு கொள்ளும் என எவராலும் முன்னறிய முடியாது. கடலோடு உறவு கொண்டவர்கள் என்பதாலே மீனவ மக்கள் பெரிதும் உணர்ச்சி மிக்கவர்களாக வாழ்கின்றனர். அவர்களுள் வரும் சண்டை சச்சரவுகளுக்கு அதுவே முக்கிய காரணம்.

இயந்திரப் படகுகளின் வருகை, கடற்புறத்து வாழ்க்கையின் இயல்பை முற்றிலும் உருமாற்றியது. பேராசை கொண்ட வணிகர்கள் உருவானார்கள். ஏற்றுமதிக்கான வணிகப் பொருட்களில் ஒன்றாக கடல் வளம் மாறியது. இதனால் மீன்பிடிக்கும் உரிமையில் சிக்கல்கள் உருவாகின. போட்டியும், பொறாமையும், வன்முறையும் வளர்ந்தன. அமைதியாக வாழ்ந்த மீனவ மக்களிடையே முரண்பாடுகள் தோற்றம் பெற்றன.

18 மீண்டு வருமா மீனவர் வாழ்வு?

மீன்பிடித் தொழிலில் பெண்கள், ஆண்களுடன் சம பங்காளிகளாகச் செயற்பட்டனர். மீன்பிடிக் கருவிகளை உருவாக்குவது, ஆண்களால் பிடித்து வரப்பட்ட மீன்களை சந்தைப்படுத்துவது, அந்த வருமானத்தைக் கொண்டு குடும்பத்தையும், சமூக உறவுகளையும் பேணுவது, தொழிற் கருவிகள் வாங்க சேமிப்பது, முதலீடு செய்வது, தேவைகளுக்காக கடன் வாங்குவது, அக் கடனை திரும்பச் செலுத்துவது போன்றவை பெண்களின் கடமைகளாக இருந்தன.

பணத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பு ஆண்களுக்குத் தரப்படவில்லை. குழந்தை வளர்ப்பு, சமையல் போன்ற வேலைகளில் ஆண்களுக்கும் பங்கிருந்தது. பெண்கள் வீடு திரும்பும்வரை குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, மனைவி வர நேரமாகி விட்டால் சமைப்பது, குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது ஆண்களின் பொறுப்பாயிருந்தது. கோயில் நிர்வாகம் போன்றவற்றில் பெண்கள் முற்றிலும் விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். தாய்வழிச் சமூகத்தின் பல செழுமையான பண்பாட்டுக் கூறுகள் அச் சமூகத்தில் பழக்கத்தில் இருந்தன.

பருத்தி நூல் வாங்கி ராட்டினத்தில் மாட்டி சிக்கெடுத்து பலகையில் சுற்றி, சுற்றியதை நூல் முறுக்கியில் போட்டு, நன்றாக முறுக்கியெடுத்த பின் மூங்கில் ஊசிகளில் கோர்த்து பெண்கள் மால் நெய்து கொடுப்பார்கள். வலைகளின் வகைக்கு ஏற்றவாறு கண்ணிகளை அளவெடுத்து மால் முடிவார்கள். முடிக்கப்பட்ட மால்களைத் தட்டுத்தட்டாக இணைத்து ஆண்கள் வலைகளை உருவாக்குவார்கள். உருவாக்கப்பட்ட வலைகளை வடிகட்டிய நீரில் ஊறவைத்து கெட்டிப்படுத்துவதும்,  புளியங்கொட்டைத் தோலை ஊறவைத்து துவர்ப்புச் சாயம் காய்ச்சி நிறமேற்றுவதும் பெண்களின் வேலை. இவை பருத்தி வலைக்கான வேலை.

இழுவலை போன்ற பெரிய வலைகளுக்கு (கடற்கரையில் குன்று போல் காட்சியளிக்கும் வலைகள்) தென்னை மட்டையை ஊறவைத்து அடித்து நாற்றெடுத்து கயிறு திரித்து கொடுப்பார்கள். ஆண்கள் பிடித்து வரும் மீன்களைப் பக்கத்து கிராமங்களுக்கோ அல்லது மீன் சந்தைகளுக்கோ எடுத்துச் சென்று விற்பனை செய்வது, மீதமாகிய மீனை கருவாடாகப் பதப்படுத்துவது எல்லாம் பெண்கள்தான். எல்லா பெண்களுக்கும் சந்தைகளில் மீன் விற்க இடம் கிடைப்பதில்லை. பெண்கள் தலைச்சுமையாகப் பல மைல்கள் நடந்து உள்ளூர் கிராமங்களுக்குச் சென்று மீன்களை விற்றுவிட்டு காலம் கடந்து வீடு திரும்புவார்கள். இந்தத் துணிவு மீனவப் பெண்களிடம் மட்டுமே இருந்தது.

கடன்சுமை மீனவர்களின் வாழ்வியலை அதிகமாகப் பாதித்துள்ளது. நிலவுடைமைச் சமூகங்களில் வழக்கத்திலிருந்த ஆண்களுக்கு ‘வரதட்சணை சீர்’  கொடுத்து திருமணம் செய்யும் முறையை மீனவர்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினர். மீன்பிடிக் கருவிகள் வாங்க பணம் திரட்டுவதுடன், பெண்ணின் திருமணத்திற்கு நகையும், பணமும் சேர்த்தாக வேண்டும் என்ற நிலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏற்பட்டது. மீன்பிடித்தொழில் உற்பத்தியிலிருந்து துரத்தப்பட்ட பெண் குடும்பத்திற்குள்ளும் மதிப்பிழந்து போனாள். இன்று கடற்கரையில் வாழ்ந்தாலும் பல பெண்கள் கடற்கரைக்குச் செல்வதில்லை.

இயற்கையோடு இயைந்து சுற்றுச் சூழலை மாசுப்படுத்தாமல், கடல்வளத்தை அழிக்காமல் அன்றைய தேவைக்கு மட்டும் மீன்பிடித்து ஆண்களும்,  பெண்களுமாக இணைந்து சுதந்திரமாகப் பாடுபட்டு வாழ்ந்து வந்தவர்கள் இந்த மீனவர்கள். கடலும், வளமும், நிலமும், சுற்றுச்சூழலும் மீனவச் சமூகத்தால் பாதுகாக்கப்பட்டு வந்தது.

“ கடலின்றி அமையாது உலகு”

 

தெய்வேந்திரம் வஜிதா

மூன்றாம் வருடம் இரண்டாம் அரையாண்டு

சமூகவியல் துறை

கலைப்பிரிவு.