Tamil News
Home உலகச் செய்திகள் மியான்மர் ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டும் – இந்திய உச்ச நீதிமன்றம்

மியான்மர் ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டும் – இந்திய உச்ச நீதிமன்றம்

சட்டவிதிகளைப் பின்பற்றி ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய  வன்முறை அந்நாட்டு இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்டது.

இதன்காரணமாக சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட  மக்கள் வங்கதேசம், மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

இதில் அதிகளவான மக்கள் வங்கதேசத்திற்கு புலம்பெயர்ந்தனர். சுமார் 40,000ம் மக்கள் இந்தியாவிற்குள் அஞ்சம் கோரியிருந்தனர்.

இதையடுத்து அசாம், மேற்குவங்கம், உத்தர பிரதேசம், டெல்லி,காஷ்மீர், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட் டுள்ளனர்.

இதில் ஜம்பு காஷ்மீரில் சட்டவிரோதமாக குடியேறியதாகக் கூறி, அடைக்கலம் கோரிய ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை இந்திய மத்திய அரசு மியான்மாருக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஜம்முவில் மட்டும் சுமார் 11,000   ரோகிங்கியா முஸ்லீம்கள் வசிப்பதாக மத்திய அரசு தகவல்கள்  தெரிவிக்கின்றன. அவர்களில் 155 பேர் ஜம்முவின் மவுலானா ஆசாத் மைதானத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை மத்திய அரசு திருப்பி மியான்மருக்கே  அனுப்ப எடுத்து வருவம் நடவடிக்கைகளை எதிர்த்து முகமது சலீமுல்லா என்ற ரோஹிங்கியா அகதி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு  நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார். “மியான்மரில் இராணுவ கொடுங்கோல் ஆட்சி நடைபெறுகிறது. இந்த நேரத்தில்  இந்த அகதிகளை   மியான்மருக்கு அனுப்பினால் அவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள். மேலும் சட்டப்பிரிவு 15மற்றும் 21க்கு எதிரானது. ” என்று சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், மத்திய அரசு சார்பில் “ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் கிடையாது. அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி உள்ளனர். அவர்களை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப வேண்டும்” என்று கூறியது.

இந்த வழக்கில் ஐ.நா. சபை சார்பில் விளக்கம் அளிக்க அனுமதி கோரப்பட்ட போதும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரத்தில் முன்னதாக   உச்ச நீதிமன்றத்தில் தனது வாதத்தில் கருத்து தெரிவித்திருந்த மத்திய அரசு,1951 மற்றும் 1967-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகதிகள் தொடர்பான ஐ.நா. சாசனங்களில் இந்தியா கையெழுத்திடவில்லை. அதனால் அந்த ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ள விதிகள் இந்தியாவுக்குப் பொருந்தாது என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version