Tamil News
Home உலகச் செய்திகள் மியான்மர் இராணுவத்துக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றம்

மியான்மர் இராணுவத்துக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றம்

மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட அந்த நாட்டு இராணுவத்துக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க  மறுத்த இராணுவம் தன் அதிகாரத்தின் கீழ் ஆட்சியைக் கொண்டு வந்துள்ளது.

மியன்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஐ.நா உட்பட உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையில் மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்தும் ஐரோப்பிய கூட்டமைப்பும் வரைவு தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தது. அதில் மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி, அதிபா் வின் மைன்ட் மற்றும் மற்ற அரசியல் தலைவா்கள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது வன்முறையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மியான்மா் விவகாரங்களுக்கான ஐ.நா. சிறப்பு கண்காணிப்பு அதிகாரி தாமஸ் ஆண்ட்ரூஸ் தனது பணிகளை செவ்வனே மேற்கொள்வதற்கான உதவிகள், ஆதாரங்களை அளிக்க வேண்டுமென்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டரெஸ், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவா் மிஷெல் பஷேலே ஆகியோரை அந்த வரைவு தீா்மானம் கேட்டுக்கொண்டுள்ளது.

47 உறுப்பினா்களை கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் வாக்கெடுப்பு நடத்தாமலேயே ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேறியது. இருப்பினும் ரஷியாவும், சீனாவும் இந்த ஒருமித்த கருத்தில் இருந்து தங்களை விலக்கிக் கொள்வதாக பின்னர் அறிவித்துள்ளன.

Exit mobile version