மாவீரர் வாரத்தை எவ்வாறு அனுஷ்டிப்பது? யாழ்ப்பாணத்தில் தமிழ்க் கட்சிகள் ஆலோசனை

மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பது என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று முடிவு செய்துள்ளன. கொரோனா பரவலுக்கு இடம் கொடாத வகையில் அதனை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பது தொடர்பில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுக்களுடன் எதிர்வரும் சனிக்கிழமை கலந்துரையாடல் நடத்தவும் நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாவீரர் நாளை நினைவேந்துவதை தடுப்பதற்கு அரசும், இராணுவமும் முயற்சிக்கும் நிலையில் அதனை நடத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் நேற்று மாலை, வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மாவை. சோ.சேனாதிராசா, ஈ.சரவணபவன், சீ. வீ. கே. சிவஞானம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் சுரேஷ் பிறேமச்சந்திரன், புளொட் சார்பில் பா.கஜதீபன், ரெலோ சார்பில் து. ஈசன், தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் என். சிறீகாந்தா, எம். கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் பொ.ஐங்கரநேசன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க. அருந்தவபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவீரர் நாளை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகள் பொறுப்புடன் செயற்படவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. கொரோனா இடர் காலத்தில் ஆயிரக்கணக்கில் மக்களை ஒன்று கூடுமாறு அழைக்க முடியாது. ஆனால், மாவீரர் வாரத்தை கடைப்பிடிக்கவேண்டும். கொரோனா இடருக்கும் மத்தியில் எவ்வாறு அதனைக் கடைப்பிடிப்பது என்பது தொடர்பில், ஒவ்வொரு மாவீரர் துயிலும் இல்லங்களுக்கும் உள்ள மாவீரர் பணிக் குழுக்களை அழைத்து கலந்துரையாடவும் முடிவு செய்யப்பட்டது