மாவீரர் நிகழ்வுகளை தடுக்கும் இராணுவத்தினர்

நாளைய தினம் மாவீரர்கள் நாளாகும். தமிழர் தாயகமெங்கும் மாவீரர்களை நினைவுகூர மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு இடையூறாக இராணுவத்தினர் அடாவடித் தனமாகச் செயற்பட்டு வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு நிறுவப்பட்டிருந்த தற்காலிக நினைவுத் தூபி மற்றும் நினைவுக் கற்கள் அனைத்தும் இராணுவத்தினரால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது யாதெனில்,

நாளைய தினம் மாவீரர் தினத்திற்கான சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுச் சுடர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் மன்னார் பண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி மற்றும் நினைவுக் கற்கள் என்பன நேற்று இரவு இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் அதிகளவான இராணுவத்தினர் வாகனங்களில் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் குறித்த துயிலும் இல்ல சிரமதானப் பணிகளில் ஈடுபட்டிருந்தோரை பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தோர் வருகை தந்த பொது மக்களை புகைப்படம் எடுத்து மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.

புதிய ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மாவீரர் நாளை நினைவுகூருமாறு தெரிவித்த நிலையிலும், நாளைய மாவீரர் தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் இராணுவத்தினரின் இச்செயற்பாடுகள் மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.