மாவீரர் நாள் :களத்திலே கருவான மாவீரரின் மகள் எழுதுகின்றேன்…

அன்று துயிலுமில்லம்  அமைதி பூத்திருந்தது. அப்பா, உங்கள் கைகளைப் பிடித்து கொண்டு நான் நடந்தேன்.  ஏதோ கேட்க வந்தேன் உங்கள் கண்கள் என்னை அமைதியாய் இருக்கும் படி சொன்னதை உணர்ந்தேன். எப்போதும் பொறி சிந்தும் அந்தக் கண்களில் அத்தனை அமைதி. உங்கள் கைகளை நெஞ்சிலே வைத்து கல்லறைத் தெய்வங்களை கண்மூடி வணங்கினீர்கள். என் கைகள் தானாகவே கூப்பிக் கொண்டன. மாமாக்கள் வைத்திருந்த ஆயுதங்களும் கீழ் நோக்கி மாவீரர்களை வணங்கி மண்டியிட்டதை கவனித்தேன். வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாத ஓர் உணர்வு. எத்தனையோ கோவில்களுக்கும் தேவாலயங்களுக்கும் சென்றிருக்கின்றேன் ஆனால் அந்த உணர்வை எங்கேயும் பெற்றதில்லை. கல்லறைக்குள் நீங்கள் எல்லாம் வாழ்கின்றீர்கள் என்றுதானே இன்று வரை நம்பிக்கொண்டிருக்கின்றோம்.  அப்போதெல்லாம் கல்லறையைத் தடவி உம்மை எழுப்பியதும் காதை வைத்து கதைக்கின்றீர்களோ எனக் கேட்டதும் உணர்வில் அடங்காத உண்மைகள்.

மரணித்த பிறகும் வாழ்வார்கள் என்றும் வாழ வைப்பார்கள் என்றும் உணர்த்திய நாள். உணர்வுகளையும் எமக்கு உரித்தானவற்றையும் எம் நினைவிருத்தி கொண்டிருக்கிற நாள் மாவீர் நாள்.

என்னவென்று எழுதுவேன்? மாவீரர் நாள் மரணத்தின் அடையாளம் அல்ல. எம் மானத்தின் அடையாளம். மிடுக்குடன் மடிந்த வீரரை மீண்டும் காண நாம் தவம் இருக்கும் நாள்.  ஒற்றுமையை பறைசாற்றும்  ஓர் உன்னத நாள் .தலைவர் மாமாவின் உரைக்கேட்க  உலகமே  விழித்திருக்கும் நாள். நாமெல்லாம் ஓர்தாய் பிள்ளைகள் என ஒரு கணமேனும் எமை நினைக்க வைக்கும் நாள். புலிக் கொடி பட்டொலி வீசி பறக்க மாவீரர் கானம் ஒலிக்க உம் கல்லறைகள் முன் நின்று விளக்கேற்றியதே நான் செய்த பேறு. அதை  இனி எப்போது மீண்டும் பெறுவேன்? என்னதான் செய்தாலும் துார தேசங்கள் எம் தாய் நிலம் இல்லையே. இங்கு உங்கள் கல்லறைகளும் இல்லையே. என்று தமிழீழ எல்லைதாண்டி வந்தோமோ அன்றே தியாகங்கள் மதிப்பிழந்தன.  நாங்கள் படும் பாட்டை ஒரு முறை கண்விழித்துப்

பாருங்களேன் எம் காவல் தெய்வங்களே. கல்லறைகள் அங்கே இடிக்கப்பட்டாலும் ஒரு முறையேனும் துயிலுமில்ல மடியிலே வீழ்ந்து வணங்கி விட்டால் உம் பிள்ளைகள் எமக்கு நிம்மதி கிடைக்கும்.

“ மாமா வீரச்சாவென்றால் மாமான்ர கல்லறைக்கு வருவீங்களா பிள்ள” என்று மாமாக்கள்   கேட்டது இன்றும் காதில் ஒலிக்கின்றதே. உங்களைக் கல்லறைக்குள் விதைக்கும் பாக்கியம் அற்றவளாக நிக்கிறேனே. உங்களில் பலரின் வீரமரணச்  செய்தியை துாரதேசங்கள் வந்த பின்புதானே  அறிந்தேன்மாமாக்களே. வெந்து போகின்றது உங்களின் பிள்ளையின் மனது.

அன்னையாய்த் தந்தையாய் என்னை சுமந்து வளர்த்தவர்களே, என்னிடம் விடைபெறாமல் நீங்கள் சென்றால் அது எனனை வதைக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா?  எங்கே உமை விதைத்தார்கள் உமை விதைத்த இடத்தில் நான்  காலுான்றி எப்படி நடப்பேன்.   “என்னவளே கல்லறைக்குள் உறங்குவது உன் கடமை என்று சொல்வாயே. உன் விதை நிலத்தை நான் எங்கு போய் தேடுவேன்? இன்றும் நினைவிருக்கிறது 2008க்கு முதல் அந்த துயிலுமில்லத்தில்  பொதுச் சுடர்  ஏற்றிய வீரர்கள் அடுத்தடுத்த மாவீரர் நாட்களுக்குள் வீரச்சாவு. சிறுமிதானே என் மனதில் இந்த துயிலுமில்லத்தில் இந்த ஆண்டும் (2008) பொதுச் சுடர் ஏற்றும் வீரன் அடுத்த மாவீரர் நாளுக்கு இருக்க மாட்டாரோ என்கிற எண்ணம் தோன்றியது. இதை நான் உங்களிடம் சொன்னதே இல்லையப்பா. பெற்ற மகளாய் நான் பதைபதைத்து நின்றது. அன்று அங்கு சுடரேற்ற வந்தது நீங்கள் அப்பா! உங்களைக் கண்டவுடன் ஒரு முறை உலகம் மௌனித்து ஒளி வீசியது. கண்கள் விலகாமல் உங்களையே பார்த்திருந்தேன். அடுத்த ஆண்டு மாவீரர் நாளன்று நீங்களும் இல்லை. தேடல்கள் மட்டும்தான் எம்மிடம் உண்டு. விடையாய் வாருங்களேன் விதைத்த வீரர்களே!

விலையற்ற வீரம்

விதையான மாதம்

முறையான வெற்றி

முள்ளாகும்  காலம்

கல்லறை முன்னின்று

அவர்களோடு கலந்தது.

 காக்றோடு அவர் வந்து

கனரனத்தில்  கதைத்தது

காவிய மாதமே கார்த்திகை  மாதமே

தூரத்தில் உமைத் தொலைத்தாலும்

தொலைத்து தான் போகின்றோம்

இந்த நாட்களில்

அருகிருந்து  அழைததுவிட மாட்டோமா?அன்னை மண்ணில் அழுது தீர்க்க மாட்டோமா?

விளக்கேற்றி நிமிர்ந்து நிற்கமாட்டோமா?கல்லறை தொட்டு உம் மேனி

தொடுவது  போல உணர்ந்துவிட மாட்டோமா?உரிமைக்காய் உரமானீர் – மாவீரரே

உணர்வற்று உக்கிப்போனோம் நாங்கள் வீரரே

வெள்ளைத் துண்டுகளால் உம்உடல்

கட்டப்பட்டு இரத்தம்  சொட்டியாதை

மறந்தேன் என்று நினைக்கிறீரோ?

புலிவரியில் பாதி இரத்தத்துக்குள்புதைந்ததை மறப்பேன் என்று நினைத்தீரோ?

புலி வீரனே! கடைசியிலே காப்பாற்ற  வழியன்றிக் காவியமாய்ப்போனவரே!

கடைசியில் நீர் கதைத்தது

காது பொத்தியும்  ஒலிக்குதையா.

சிவப்பும் மஞ்சளும் என்றும்உம் சிந்தையின் சித்திரமாய் உலகைல்லாம் கோலமிடும்  குவிக்கப்பட்ட சடலங்களும்

இடிக்கப்பட்ட கல்லறையின் கற்களும்

ஒரு  நாள் கோபுரமாய் மாறும்

மானமாவீரரே !

இன்றும்  உரிமை வேண்டி

உம் முன்னே தான் மண்டியிட்டுநிற்கின்றோம் மறக்கவில்லை நாங்கள்

மறக்கமுடியா மரணம்வென்ற மாண்பு  நீங்கள். வல்லமை தாருங்கள் உம் பிள்ளைகள் உரிமையை உரத்துக் கூற வல்லமை தாருங்கள்!

வீர வணக்கம் மா வீரவணக்கம்

அ.வி.முகிலினி