Tamil News
Home செய்திகள் மாவீரர் தின நிகழ்வுகளை அரசாங்கம் இடையுறு செய்யாது – விக்னேஸ்வரன்

மாவீரர் தின நிகழ்வுகளை அரசாங்கம் இடையுறு செய்யாது – விக்னேஸ்வரன்

நாளைய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் எந்த இடையுறுகளும் இன்றி நடைபெறுவதற்கு புதிய அரசாங்கம் ஆவன செய்யும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் வென்றெடுப்பதற்குமாக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த விடுதலை வீரர்களை நினைவுகூர்ந்து நினைவு நாள் அனுஸ்டிப்பது வரலாற்றுக் காலம் தொட்டு உலகம் பூராகவும் மனித நாகரிகத்தின் முக்கிய பண்பாக காணப்படுகின்றது.

ஆனால், யுத்தம் நடைபெற்ற போது தமது உயிர்களை நீத்த விடுதலை வீரர்களை கார்த்திகை மாதத்தில் நினைவு கூருவதற்கு கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு பல்வேறு தடைகளும் இடைஞ்சல்களும் நாகரிகமற்ற முறையில் ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இருந்த போதிலும், சட்டம் மற்றும் ஒழுங்கு, அமைதி ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படாத முறையில் மிகவும் அமைதியான முறையில் உணர்வுபூர்வமாக கார்த்திகை மாத நினைவுகூரலை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை 27ஆம் திகதி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் அமைதியான முறையில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிகின்றேன்.

அமைதியான வழியில் உரிய சட்ட வழிமுறைகளை பின்பற்றி எமது மக்கள் இந் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்.

மேலும் இந்நாட்டில் நிலையான சமாதானத்தையும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பாடுபடுவதாக கூறியிருக்கும் புதிய அரசாங்கம் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் எந்த இடையூறுகளும் இன்றி நடைபெறுவதற்கு ஆவன செய்யும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version