Home செய்திகள் மாவீரர்களின் ஆத்மா உங்களை ஒருபோதும் மன்னிக்காது – மட்டு.நகரான்

மாவீரர்களின் ஆத்மா உங்களை ஒருபோதும் மன்னிக்காது – மட்டு.நகரான்

எங்கள் பிள்ளைகள் இந்த மண்ணைப்பாதுகாக்க மாவீரர்கள் ஆனார்கள். அவர்கள் சுமந்த கனவுகளை யாரும் நாசமாக்கிடாதீங்க. இங்கு தமிழர்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்டுதான் எங்கள் பிள்ளைகள் களமுனைக்கு போய் வித்தாகினார்கள். அவர்கள் நாங்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்றுதான் மாவீரர்களானார்கள்.

அவர்களின் கனவை யாரும் மறந்திடாதீங்க ஐயா என அண்மையில் மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் இரண்டு மாவீரர்களைப்பெற்ற தாய் ஒருவர் அழுதவாறு தெரிவித்தார்.

vaakarai மாவீரர்களின் ஆத்மா உங்களை ஒருபோதும் மன்னிக்காது - மட்டு.நகரான்நாங்கள் எங்களது மண்ணுக்காக உயிர்நீத்த பிள்ளைகளை நினைவுகூறுகின்றோம். உங்களது சிங்களவர்கள் உயிர்நீத்தால் நீங்கள் நினைவுகூருவதுபோன்று நாங்கள் எங்கள் பிள்ளைகளை நினைவுகூருகின்றோம். நாங்கள் எங்கள் பிள்ளைகளை நினைவுகூருவது எங்கள் உரிமை.அதனை நீங்கள் எங்களுக்கு தரதேவையில்லை. நாங்கள் எங்களது நிலத்தில் எங்களது பிள்ளைகளை நினைவுகூருவது எங்களது கடமை.எங்களது கடமையில் தலையிடுவதற்கு நீங்கள் யார் என்று வெல்லாவெளியில் நடைபெற்ற மாவீரர்கள் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் பொலிஸார் விளைவித்த குழப்பத்தின்போது பல மாவீரர் பெற்றோர் பொலிஸாருடன் ஏற்பட்ட முரண்பாட்டின்போது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதேபோன்று எங்களுக்கு புலம்பெயர் நாட்டில் உள்ள தேசியப்பற்றாளர்கள் ஒன்றும்செய்யாவிட்டாலும் எங்கள் மாவீரர்களை நினைவுகூருவதற்கு எங்களுக்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தாருங்கள்.எங்களுக்காக உயிர்நீர்த்த எங்களது உறவுகளை நினைவுகூருவதற்கு எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தினைப்பெற்றுத்தாருங்கள்.

வருடத்தில் ஒரு நாள் நடக்கும் நிகழ்வில் நாங்கள் சுதந்திரமாக எங்களது உறவுகளை நினைவுகூர சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தாருங்கள் என்று திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியொருவரின் மகள் கடந்த 27 ஆம் திகதி மாவீர் தினத்தன்று கண்ணீர்மல்க இந்த கோரிக்கையினை விடுத்திருந்தார்.

மாவீரர் நாளில் எனது அப்பாவை நினைத்து எனக்கு தெரிந்த மாமாக்கள்,அண்ணாக்கள், அக்காக்களை நினைத்து துயிலும் இல்லத்திற்கு சென்று மாலை போட்டு ஒவ்வொரு ஆண்டும் விளக்கேற்றி வந்தேன்.

இந்நிலையில் இவ்வருட மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக சென்ற போது மூதூர் – சம்பூர் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் வைத்து எங்களை திருப்பி அனுப்பினர், திரும்பி போக மாட்டோம் என சொன்னவர்களை கையை பிடித்து இழுத்து பொலிஸ் வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர்” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

வடகிழக்கில் இந்த மண்ணுக்காக ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூர்ந்து மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. வடக்கினைப்பொறுத்த வரையில் மாவீரர் துயிலும் இல்லங்களில் அமைதியான முறையில் எழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்ற அதேநேரம் கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் போர்கோலம் கொண்ட நிலையில் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டன.

வடக்கில் சுதந்திரமாக மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்துதற்கு தடைகளை ஏற்படுத்தாத சிங்கள காவல்துறையினர் கிழக்கில் மாவீரர் துயிலும் இல்லங்களை போர்க்கோலமாக்கியது ஏன் என்ற கேள்வி இன்று கிழக்கு மக்கள் மத்தியில் எழுந்துநிற்கின்றது.வடக்கில் நீதிமன்றங்களில் பொலிஸாரினால் விடுக்கப்பட்ட தடைசெய்யும் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்த தடையும் ஏற்படுத்தாத அதேவேளை கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பொலிஸாரினால் நீதிமன்றங்களில் கோரப்பட்ட தடைகள் நிராகரிக்கப்பட்டபோதிலும் அதனையும் மீறி துயிலும் இல்லங்கள் மீது அடாவடித்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபராக அஜித்ரோகன நியமிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கில் தமிழ் தேசியம்சார்ந்த மாவீரர் நினைவுதினம் சார்ந்த சிங்கள அத்துமீறிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் சார்ந்த செயற்பாடுகளுக்கு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் தென்னிலங்கை இனவாதிகள் மத்தியில் தன்னை ஒரு இனவாதியாக பொலிஸ் அதிகாரி ஒருவர் காட்டமுற்படுகின்றாரா என்ற சந்தேகம் ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் கிழக்கு மீட்பு என்ற தோறனையில் இலங்கை அரசின் கைக்கூலிகளாக செயற்படும் பிள்ளையான் போன்றவர்களின் அரசியல் நிலைக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் காவல்துறையினைக்கொண்டு இவ்வாறான நிகழ்வுகளை தடுப்பதற்கான முன்னெடுப்புகளும் முன்னெடுக்கப்பட்டன.

இவை அனைத்தையும் தாண்டி,சிங்கள காவல்துறையின் அடாவடித்தனங்கள்;, தடைகளையும் தாண்டி ஆயிரக்கணக்கில் ஒன்றுதிரண்ட மக்கள் இம்முறை கிழக்கில் மாவீரர் தினத்தை அனுஸ்டித்துநிற்கின்றார்கள்.இந்த ஒன்றிணைவு கிழக்கு மாகாணத்திலிருந்து சிங்கள தேசத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

வடகிழக்கு தமிழர்களின் தாயகம்.தமது தாயகத்தினை கூறுபோடுவதற்கோ தமது தாயகத்தினை அபகரிப்பதற்கோ இடமளிக்கமுடியாது.மாவீரர்களின் தியாகங்களை யாரும் கொச்சைப்படுத்தவோ அவர்களின் தியாகங்களை மறந்தோ யாரும் செயற்படமுடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

இதன்காரணமாகவே சிங்கள தேசம் கிழக்கில் மாவீரர் தினத்தை ஒடுக்குவதற்கு முயற்சியினை முன்னெடுத்தது. கிழக்கில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சிங்கள பேரினவாதத்தின் அடாவடித்தனங்கள் என்பது தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் பாரிய உணர்வலைகளை ஏற்படுத்திவருகின்றது.

இதன்காரணமாகவே மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுதிரண்டுவந்ததையும் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிங்கள காவல்துறையுடனும் முரண்பட்டதையும் காணமுடிந்தது.கடந்த காலத்தில் அச்சம் காரணமாக நேருக்கு நேர் நின்ற கதைக்காதவர்கள் இன்று நேருக்க நேர் நின்று போராடும் நிலை காணப்படுகின்றது. இந்த நிலைமையினை சிங்கள தேசம் அவதானமாக கையாளாவிட்டால் எதிர்காலத்தில் இந்த நாட்டில் மீண்டும் ஒரு போராட்ட நிலை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.

அண்மையில் மட்டக்களப்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் நாயகம் ஆகியோர் விடுத்த அறிவிப்புகள் இன்று வடகிழக்கு இளைஞர்களின் உள்ளக்கிடங்கைகளை வெளிப்படுத்தி நிற்கின்றது.அடக்குமுறைகள் நெருக்குதல்கள் அதிகரிக்கும்போது,அந்த அடக்குமுறைகளுக்கு எதிராக வீறுகொண்டு எழுகின்ற நிலைப்பாடுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.

இதேபோன்று உங்களுடன் நாங்கள் இணைந்துவாழ விரும்ப வில்லையென்றால் எங்களை பிரித்துவிடுங்கள் நாங்கள் நிம்மதியாக வாழ்கின்றோம் என்று அக்கட்சியின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலைப்பாடுகள் இன்று தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

எது எவ்வாறாயிருந்தாலும் வடகிழக்கில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்படாதவரையில் சிங்கள தேசத்தின் அடக்குமுறைகள் என்பதை எதிர்கொள்ளமுடியாத நிலையே ஏற்படும்.

மாவீரர்கள் எந்த கனவுடன் இந்த மண்ணில் விதையானார்களோ அந்த கனவை நிறைவேற்றவேண்டியபொறுப்பு இந்த மண்ணில் உள்ள தமிழ் தேசிய சக்திகளுக்கும் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் தேசிய சக்திகளுக்கும் உள்ளது.இதனை நிறைவேற்றமுழுமூச்சுடன் செயற்படும்போதே இந்த மண்ணுக்காக வித்தாகிய மாவீரர்களின் கனவினை நிறைவேற்றமுடியும்.

வெறுமனே துயிலும் இல்லங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினால் மட்டும் போதும் என்று யாரும் கருதினால் அந்த மாவீரர்களின் ஆத்மா என்பது உங்களை ஒருபோதும் மன்னிக்காது என்பதே உண்மையாகும்.

Exit mobile version