மாவீரரைப் போற்றுதலேபுதிய ஒழுங்குமுறையில் ஈழத்தமிழரைப் பாதுகாக்கும்

உலகின் அரசியல் பொருளாதார இராணுவ முறைமைக்கான புதிய ஒழுங்குமுறை ஒன்று அமெரிக்காவில் மக்களால் புதிதாகத் தெரிவாகியுள்ள சனநாயகக்கட்சியைச் சேர்ந்த அரச தலைவர் மதிப்புக்குரிய ஜோ பைடன் அவர்களால் 20.01.2021க்குப் பின் எவ்வாறு முன்னெடுக்கப்படும்? .இது இன்றைய உலக அரசியலில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

இதில் கோவிட்-19 தொற்றின் உள்ளகத் தாக்கமும் அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியிலான புறத்தாக்கமாக உள்ள சீனாவின் உலகப் பொருளாதார மேலாண்மையும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறது.

இந்த எதிர்பார்ப்பில் இந்துமா கடலில் இலங்கைத் தீவுடன் சீனாவுக்கு உள்ள அரசியல் அமுக்க சத்தியை எவ்வாறு அமெரிக்கா  குறைத்து தனது அரசியல் அமுக்க சத்தியை அங்கு அதிகரிக்கப் போகிறது?

இதற்கு இந்தியா சார்ந்த முறையிலும், அமெரிக்க நேரடி உதவிகள் மூலமும் இந்தப் புதிய ஒழுங்குமுறை இலங்கையில் அமையும் என்பது விடையாக உள்ளது.

எனவே இந்தியாவுடனும், அமெரிக்காவுடனும் ஈழத்தமிழ் மக்கள் தங்களது தொன்மையும், தொடர்ச்சியுமான உறவுமுறைகளைப் புதுப்பிப்பதன் மூலம் இவ்விருநாடுகளினதும் தேசிய நலன்களில், ஈழத்தமிழரின் இந்துமா கடல் இருப்பு, வரலாற்றில் எத்தகைய பாதுகாப்பை வழங்கியது – வழங்குகிறது- வழங்கும் என்பதனைத் தெளிவாக்க வேண்டிய காலகட்டமிது.

அந்தப் பாதுகாப்பு சிங்கள பௌத்த பேரினவாதக் கொள்கைக்கு இந்த நாடுகள் ஆதரவு அளித்ததின் மூலம், இனஅழிப்புடன் கூடிய இனங்காணப்படக்கூடிய அச்சத்துக்குரிய வாழ்வுக்குள் ஈழத்தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளதன் பின்னணியில், இன்று எவ்வாறு மாறுபட்டுள்ளது என்பதை, ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் புலத்திலும் இவ்விருநாடுகளுடனுமான உரையாடல்கள் மூலம் தெளிவாகவும், விரைவாகவும் விளக்க வேண்டிய நேரமாக இன்றைய காலகட்டம் அமைகிறது.

அமெரிக்காவுடனான இந்த உரையாடலில், தாய்த் தமிழினத்தவர் என்ற இனத்துவத் தொடர்பை தெரிவாகியுள்ள அமெரிக்காவின் துணை அரசத்தலைவர் மதிப்புக்குரிய கமலா ஹாரிஸ் அவர்கள் கொண்டுள்ளதும், சென்னையில் வாழ்ந்த தொன்மைத் தொடர்பைக் கொண்ட பாரம்பரியத்தில் வந்தவர் என்ற வரலாற்றை தெரிவாகியுள்ள அமெரிக்க அரசதலைவர் ஜோ பைடன் அவர்கள் கொண்டிருப்பதும், வரலாற்றின் புரிதலுக்கு ஓரளவு உதவக்கூடும்.

ஆயினும் அமெரிக்க கட்டமைப்புக்கு ஈழத்தமிழர்களின் சமூக மூலதனமும், புத்திஜீவித்தனமும் எந்த அளவுக்குப் பயன்படும் என்பதை ஈழத்தமிழர்கள் உணர்த்துகின்ற அளவுக்குத் தான் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பாளரிடை ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு குறித்த அக்கறை அமையும்.

அவ்வாறே இந்தியாவின் அக்கறை என்பது அதனுடைய நலனில் ஈழத்தமிழினத்தின் இருப்பு வகிக்கும் பங்கின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும். எனவே ஈழத்தமிழர்கள் இந்தியாவுடனும், அதனுடைய நலன் என்பதில் தங்களின் முக்கியத்துவம் குறித்த உரையாடல்களை வேகப்படுத்த வேண்டும்.

மேலும் ஈழத்தமிழர்களுடைய மனித உரிமைகள், சனநாயகம், நல்லாட்சி என்பவற்றை  அவர்களின் ஈழமண் மீதான தொன்மையும், தொடர்ச்சியுமான இறைமையின் அடிப்படையிலான அவர்களின் உள்ளக – வெளியக தன்னாட்சி உரிமைகளின் அடிப்படையில், எடுத்து நோக்கப்படுகின்ற பொழுதே அது இயல்பானதாகவும், இயற்கையானதாகவும் அமையும் என்பது வெளிப்படையான உண்மை. இந்த உண்மை எந்த உரையாடலிலும் முதன்மை பெற்றாலே ஈழத்தமிழர் உரிமைகள் இயல்புநிலையில் பாதுகாப்புறும்.

எங்களின் சொந்த மண்ணான இந்த மண்ணில் சலுகைகளை அல்ல உரிமைகளையே உடையவர்கள் நாங்கள் என்ற இந்த இருப்பை உறுதி செய்தவர்களே தமிழீழ மாவீர்கள். அவர்களுடைய நினைவேந்தலை தங்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களின் நினைவேந்தலாகவே ஈழத்தமிழ் மக்கள் தாயகத்திலும், புலத்திலும் கார்த்திகை மாதம் முழுவதும் போற்றித் தம்மினத்தின் தேசிய உணர்வாக வெளிப்படுத்தி நிற்கின்றனர்.

இது ஈழமக்கள் உரிமைகளை எந்த சக்தியாலும் அவர்களை விட்டுப் பிரிக்க இயலாது என்ற உண்மையை உலகுக்குச் சொல்கிறது. இந்த உண்மையை பலமாக்குவதற்குத் தாயகத்திலும், புலத்திலும் உள்ள ஈழத்தமிழர்கள் வெளிப்படையான முறையில் மாவீரர் மாதமான இக்கார்த்திகை மாதத்தில் தங்கள் மாவீரர் போற்றுதலை இயலுமான எல்லாவகையிலும்  உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

மாவீரரைப் போற்றுதலே உலகுக்கான புதிய ஒழுங்குமுறையொன்று தோற்றம் பெறும் இக்காலகட்டத்தில், ஈழத்தமிழர்களின் உரிமைகள் சனநாயக வழிகளில் பாதுகாக்கப்படக் கூடிய கொள்கை வகுப்பு உலகில் இடம்பெறச் செய்து, ஈழத்தமிழர்களின் உரிமைகள் பாதுகாப்புற வைக்கும்.