மாற்று வழி என்ன உள்ளது?

சிறீலங்காவின் ஜனாதிபதி கோட்டமாபய ராஜபக்‌ஷ தெரிவித்த ஒரு கருத்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து மீண்டும் சர்ச்சை ஒன்றை உருவாக்கியிருக்கின்றது. பொறுப்பான பதவி ஒன்றில் இருப்பவர், ஏற்கனவே மற்றொரு பொறுப்பான பதவியில் இருந்தவர் பொறுபற்பற்ற வகையில் பதிலளித்திருப்பது மனித உரிமைகளுக்காப் போராடுபவர்களுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

அத்துடன், பொறுப்பு கூறல் பொறி முறை எதனையும் அவர் ஏற்கப்போவதுமில்லை. நடைமுறைப்படுத்தப் போவதுமில்லை என்பதையும் இது உறுதிப்படுத்தியிருக்கின்றது. இந்த மாற்று வழி ஒன்றைத் தேடிச் செல்ல வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

போரின் இறுதிக் காலகட்டத்தில் அல்லது போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து அல்லது கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் இப்போது உயிருடன் இல்லை என்ற ஸ்ரீலங்கா அரசாங்க தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கருத்தே இப்போது சர்ச்சைக்குரியதாக இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது கூட இதேபோன்ற ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.

தமிழ் மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பொறுப்பற்ற வகையில் அவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் குறித்து பெரும்பாலான தமிழ்த் தலைமைகள் கூட மௌனமாகத்தான் இருக்கின்றன.

2009இல் தமிழின அழிப்புப் போர் இடம்பெற்றபோது ஸ்ரீலங்கா இராணுவ நடவடிக்கைகளுக்கு கண்காணிப்பாளராக இருந்தவர் என்பதுடன், பாதுகாப்பு அமைச்சின் நிரந்தர செயலாளராகவும் கோட்டாபய ராஜபக்சவே கடமையாற்றினார். அந்தவகையில் அப்போது இடம்பெற்ற நிகழ்வுகள் அனைத்திற்கும் பொறுப்புக்கூற வேண்டிய ஒருவராக அவர் இருக்கின்றார்.

அதற்கு மேலாக இப்போது சிறிலங்கா நாட்டின் அதிபராகவும் முப்படைகளின் தளபதியாகவும் இருக்கும் ஒருவர் பொறுப்பற்ற விதத்தில் சொல்லியிருக்கிற பதில் ஐக்கிய நாடுகள் சபையின் நடைமுறைகளையும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களையும் ஏற்றுக் கொள்வதற்கு அவர் தயாராக இல்லை என்பதைத் தெளிவாக புலப்படுத்தியிருக்கின்றது.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிருடன் இல்லை என்பதை கோதாபய ராஜபக்ஷ அறிவித்திருப்பது தானும் சிறி லங்கா அரசும் பன்நாட்டு சட்டத்தை மோசமாக மீறியுள்ளோம் என்ற குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சமனானது என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட செயலகம் கூட அதிகாரம் அற்றதாகவும், சிறப்பான முறையில் செயற்படாத ஒன்றாகவுமே இருந்துள்ளது. சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான ஒரு நாடகமாக மட்டுமே இந்தச் செயலகம் இருந்துள்ளது என்பதையும் கோதாபய ராஜபக்ஷவின் கருத்துக்கள் புலப்படுத்துகின்றன.

காணாமல் போனோர் விவகாரத்தில் சிறீலங்கா அரசாங்கம் ஆக்கபூர்வமாக எதனையுமே செய்யப் போவதில்லை என்பது கடந்த காலத்திலேயே வெளிப்படையாக தெரிந்தது. இப்போது சிங்கள பௌத்த மக்களின் ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்திருக்கும் கோட்டாபய முழு அளவில் அவர்களுடைய நலன்களையே முன்னிலை படுத்தும் ஒருவராக காணப்படுகின்றார்.

அதனால், இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. அதனால் மனித உரிமை அமைப்புக்களும் சர்வதேச சமூகமும் இவ்விடயத்தில் ஆக்கபூர்வமான முன்னேற்றம் ஏதாவது ஏற்படக் கூடிய வகையில் மாற்று திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இன்றைய அவசரமும் அவசியமும் ஆகும்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் ஜெனீவாவில் ஆரம்பமாக உள்ள நிலைமையில் இதற்கான தேவையும் முன்னரை விட அதிகமாக உள்ளது என்பதை சொல்லி வைக்க விரும்புகிறோம். மனித உரிமை அமைப்புக்கள் இதற்கான தயாரிப்புக்களை இப்போதே ஆரம்பிக்காவிட்டால், சிறீலங்கா அரசாங்கம் வழமைபோல சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான உபாயங்களுடன் களமிறங்கும்.

அதற்கான மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்து அதற்கான உறுதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியும்.

– ஆசிரியர் (இலக்கு மின்னிதழ்)