மாற்றான் தாய் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பொது மன்னிப்பு – ஜனகன் விநாயகமூர்தி

போதைவஸ்து கடத்துவதில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை கொடுத்தே தீருவேன் எனக் கூறிவந்த ஜனாதிபதி அந்தப் போதைவஸ்துக்கு அடிமையாகி ஒரு பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து மரண தண்டனை விதிக்கபட்டவருக்குப் பொது மன்னிப்பினை வழங்கியது அதிர்ச்சியைத் தருகிறது.

இந்தப் பொது மன்னிப்பில் நியாயம் கண்ட ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் சத்தியானந்தம் ஆனந்த சுதாகரனின் குழந்தைகள் இருவரும் தாயின் மரணத்தின் பின் அனாதைகளான நிலையில் அந்த இரு குழத்தைகளினதும் உருக்கமான வேண்டுகோளில் நியாயம் காணத்தோன்றாதது ஏன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியின் வன்னித்தேர்தல் மாவட்ட அமைப்பாளருமான ஜனகன் விநாயகமூர்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2008 இலிருந்து தசாப்த காலமாக அரசியல் கைதியாகச் சிறைப்பிடிக்கப்பட்ட சத்தியானந்தம் ஆனந்த சுதாகரன்; ஆயுள் கைதியாகி மகசீன் சிறைச்சாலையில் இருந்துவரும் நிலையில் இரு குழந்தைகளையும் அநாதரவாக இவ்வுலகில் தங்களின் நாட்டில் பரிதவிக்க விட்டு விட்டு அவரது மனைவி கடந்த ஆண்டு 15.03.2018 அன்று இறந்துவிட்டார்.

அவர் அவரது மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பிச் சிறைக்குச் செல்கையில் அவரின் பெண்குழந்தையும் சிறைச்சாலை வண்டியினுள் தந்தையுடன் ஏறியது அனைவரையும் கண்ணீர் சிந்தி அழ வைத்தது.

இவரை நிபந்தனையற்ற பொது மன்னிப்பில் ஜனாதிபதி விடுதலை செய்யக்கோரி வன்னி  மாவட்டம் பூராக ஐந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட கையெழுத்துக்களை பெற்று நாட்டின் ஜனாதிபதியின் கவனத்தையும் சர்வதேசநாடுகளின் அவதானத்தையும் பெற்று விடுதலையை துரிதப்படுத்த அனைத்து பொது அமைப்புக்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் உணர்வாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இருந்தார்கள்.

ஆனால் இந்த மனித நேயக் கோரிக்கையில் இருந்த நியாயத்தினை விட போதைவஸ்துக்கு அடிமையாகி அப்பாவிப் பெண்ணை கொடூரமாகக் கொலை செய்தவருக்கு பொது மன்னிப்பினை வழங்கவதனூடாக அதில்அதிக நியாயம் கண்டுள்ளாரா ஜனாதிபதி என மேலும் கேள்வி எழுப்பி உள்ளார் ஜனகன் விநாயகமூர்த்தி. மேலும் ஜனாதிபதியின் இப்படியான செயற்பாடுகள் தமிழர்களை இந்த நாட்டின் ஜனாதிபதி உட்பட அனைத்துப் பெரும்பான்மை கட்சிளும் மாற்றான் தாய்ப் பிள்ளைகளாகப் பார்ப்பதையே உணர்த்துகிறது.

மரண தண்டனைக் கைதிக்கு பொது மன்னிப்பு கொடுக்க தனது அதி உச்ச அதிகாரத்தினை பயன்படுத்திய ஜனாதிபதிக்கு பல ஆண்டுகளாக வழக்குகள் தொடரப்படாமலேயே சிறைகளில் வாடும் தமிழ் அரசியல்கைதிகள் பற்றி ஞாபகம் வராதது தமிழர்களை இவர்கள் எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது என்றார்.