மாற்றத்தை நோக்கிச் செல்வதே எமது இலக்கு… – வெற்றிச்செல்வி

உலகெங்கும் இன்றும் ஒடுக்கப்படும் இனங்கள் மற்றும் சமூகங்கள் தம்மை ஒடுக்குவோருக்கு எதிராகப்  பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அதே போல் இப்போது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் கூட போராட்டத்திலே தான்  தொடங்கியது.

தமக்கு ஒதுக்கப்பட்ட வேலை நேரத்தை குறைக்கவும், தமக்குத் தரப்படும் வேதனத்தை உயர்த்துமாறு வலியுறுத்தியும் அதேவேளை தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைக் கோரியும் 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 1908ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி ஒரு  பேரணியை நடத்தினர். அடுத்த ஆண்டு இதே நாளைத் தேசிய பெண்கள் தினமாக அமெரிக்க குடியரசுக் கட்சி அறிவித்தது.

இதையடுத்து 1975ஆம் ஆண்டுதான் இந்த நாளைச் சர்வதேசப் பெண்கள் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது.

உலகம் முழுவதும் பெண்கள் நாள் கொண்டாடப்பட்டு வருகின்ற போதிலும், இன்றும் உலகளவில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக நாளுக்குநாள் போராட வேண்டிய நிலையில் தான் உள்ளனர்.  இலங்கையில்  2009 இல் முடிவுற்ற போருக்குப் பின்னர் பெண்கள் பல்வேறு விதமான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.  போரில் அவயங்களை இழந்தவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நிலையிலே வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு போரில் அவயங்களை இழந்து மாற்றுத் திறனாளிகளாக வாழ்ந்து வருபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார் முன்னாள் போராளியும் எழுத்தாளருமான வெற்றிச்செல்வி அவர்கள். 

இந்நிலையில், உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு வெற்றிச்செல்வியுடன்  இலக்கு ஊடகம் ஒரு நேர்காணலை மேற்கொண்டது. அந்த நேர்காணலை எமது வாசகர்களுக்காக இங்கே தருகிறோம்.

கேள்வி – சர்வதேச மகளிர் நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற போதும், இன்னும் மகளிர் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் – சர்வதேச நாட்களை உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிப்பவர்கள் துறைசார் ஆர்வலர்கள் மட்டுமே. அவ்வாறே மார்ச் 8 பெண்கள் நாளும். இந்த ஆர்வலர்களாலும், தன்னார்வத் தொண்டர்களாலும் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வுகளால் சிலர் மட்டும்தான் புரிதலுக்கு உட்படுகிறார்கள்.

அதிகார மனோநிலையில் இருப்பவர்கள் இந்த நாட்களை எல்லாம் பத்தோடு பதினொன்றாய் கடந்து விடுகிறார்கள். தத்தமக்கென்று பிடிவாதங்களையும், அதிகாரங்களையும் வைத்திருக்கின்ற அல்லது வளர்த்துக் கொண்டிருக்கின்றவர்களை ஆண்டாண்டுக்கு வந்துபோகும் இந்தக் கலண்டர் நாட்களால் மாற்றிவிட முடியாது.

மார்ச் 8 ஐ ஒரு நிகழ்வாகவோ வெறும் விழாவாகவோ நடத்தி முடித்துவிட்டுப் போகின்ற பல அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களை பார்க்கிறேன். உண்மையான மன மாற்றத்திற்கான அல்லது ஆழமான புரிதலுக்கான நிகழ்வுகளாக அவை நடக்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடிகிறது.

அநேகமான மகளிருக்கு மட்டுமல்ல மகனாருக்கும் தமது உரிமைகள் எவை, கடமைகள் எவை என்று தெரிந்திருக்கவில்லை. மனிதர்களை மனிதர்கள் அணுகுவதில், நடத்துவதில் நிகழும் மனிதாபிமான வறுமைதான் உரிமைகள் மறுக்கப்படுவதற்குக் காரணமாகின்றது. பாகுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் அடக்குமுறைச் சிந்தனைகளையும் கொண்டவர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் முரணானவர்கள்.

மேலும் மனிதர்கள் தொடர்பாக நாம் ஒவ்வொருவரும் வைத்திருக்கின்ற பொதுப் புத்தியின்பால் சரிந்து விழுகிறோம். அதனைச் சமூகத்தின் மீது பொதுவாகத் தூக்கிவைத்துப் பேசிவிட்டுக் கடந்து போய்விடுகிறோம். பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் கூட சுதந்திரமாக தமது குரலை உயர்த்துவதில் தடைகள் இருக்கின்றன. ஏதோ ஒரு விதத்தில் அவர்களும் ஓரங்கட்டப் படுகிறார்கள்.

சாதாரண சமூக வாழ்வுக்கு எதிரானவர்களைப் போலவும் அல்லது அதீத திறமையுள்ளவர்களைப் போலவும் கருதப்படுகிறார்கள். எப்போது மக்கள் தமது சுதந்திரமான வாழ்க்கை முறைக்கான விழிப்புணர்வாக மனித உரிமைகளை புரிந்து கொள்கிறார்களோ அப்போது பெண்களுக்கான உரிமைகளும் மதிக்கப்படும். ஆனால் ஒரு சமூகத்தில் அனைத்தும் நூறு வீதம் சாத்தியமாவதில்லை என்பதே யதார்த்தமும் எனது கவலையும்.

கேள்வி – பெண் சமத்துவத்தை எட்டுவதில் எமது சமூகத்தில் ஆண், பெண் இரு பாலாரினதும் பங்கு எந்தளவு உள்ளதென கருதுகிறீர்கள்?

பதில் – மனித எண்ணங்களில் பாகுபடுத்தி வைத்திருக்கும் ஆண், பெண் மன நிலையை முதலில் நாம் விட்டொழிக்க வேண்டும். சாதி, சமய, இன, மத, நிற, அரச உத்தியோக, பொருளாதார அனைத்து நிலைகளிலும் மனிதாபிமானத்தைக் கடைப்பிடிக்கும் மனங்கள்தான் வேண்டும். மனிதர்களைத்தான் மதிக்க வேண்டும். மனிதர்களுக்குள் யாவரும் அடங்குவர்.

கேள்வி – இவ்வாண்டு ‘பெண் தலைமைத்துவமும் கோவிட் – 19 இன் பின்னான காலத்தில் பெண் சமத்துவத்தை எட்டுதல்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகிறது. இவ்விலக்கை எட்ட மகளீர் அமைப்புக்கள் எவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்?

பதில் – ‘பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள்’ என்ற சொல்லின் வலிமையைப் புரியாமலேயே பயன்படுத்திக் கொண்டிருக்கும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் அநேகமாக வாழும் நாட்டில் வசிக்கிறவர் என்ற வகையில் சொல்கிறேன்; யாரோ எழுதும் இலக்கை யாரோ நிறைவேற்ற முடியாது. நமக்கு எது தேவை என்று நாம் தீர்மானிக்கிறோமோ அதனை எட்டுவதற்காக மட்டுமே நாம் முயற்சிக்கலாம்.

சிறப்பு நாட்களுக்காக இலக்குகளை வரையறுப்பதெல்லாம் ஒரு தூண்டலுக்கானது மட்டுமே. பெண்கள் தமது அறிவாலும், ஆற்றலாலும் தமக்கான சுயத்தை நிலைநாட்டி வாழ வேண்டும். சமத்துவம் கேட்டுப் பெறக்கூடியதல்ல. அது சுயத்தின்பாற்பட்டது. அந்தச் சுயத்தை பிடிவாதம், வரட்டு கௌரவம், சண்டை, அதிகாரம் என்பவற்றில் இருந்து வேறுபடுத்த மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

கேள்வி – மகளீர் மேம்பாட்டில் மாற்றம் கொண்டு வர ஆண்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில் – ஆண்கள் தனியாக என்ன செய்ய முடியும்? ஆண்களோ பெண்களோ முதலில் மனித மனங்களைப் புரிந்து கொள்ளுங்கள். ஆயிரத்தெட்டுச் சட்டங்களை எழுதியும் எழுதாமலும் வைத்துக்கொண்டு வாழ்வைச் சிக்கல்களுக்குள் முடக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளை பாரபட்சங்களோடு வளர்க்காதீர்கள்.

ஆண் என்பது அதிகாரமல்ல. அது பால். நேரும் மறையும் இல்லாமல் மின்சாரமில்லை. நேரும் மறையும் நூலளவு சறுக்கினாலும் இருட்டுக்குள்தான் கிடக்க வேண்டும். சறுக்காமல் வாழ உதவுவது சுதந்திமான வாழ்க்கையைக் கொண்டாடுவதே ஆகும். சுதந்திர உணர்வு என்பது உயிரின் உணர்வாகும். இதில் ஆண்-பெண் பிரிப்பு தேவையே இல்லை. வாழ்வை இலகுவாகவும் சுதந்திரமாகும் அறிவோடும் வாழப்பழகுதலே வாழ்வின் கலை. வாழ்வின் கலையை மக்கள் மதிக்க வேண்டும் கொண்டாட வேண்டும்.

பெண்களை வீட்டோடு வீட்டுச் சாதனங்களில் ஒன்றைப்போல பாவித்து வந்த பெரும்பான்மை மனோநிலை மாறி வருவதைக் காணமுடிகிறது. அதற்கு மனிதாபிமானத்தை வளர்க்கவும் மனித மாண்பைப் பெருக்கவுமான நுணுக்கங்கள்தான் தேவை. அவற்றைத்தான் சமூகம் கண்டடைய வேண்டும்.

(‘ஆணாதிக்கம்’ என்ற சொல் பொருத்தமானதா என்று தெரியவில்லை. ஆண் என்பதோடு ஆதிக்கம் சேர்வதால் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவதில் எனக்குத் தயக்கம் இருக்கிறது. பேராண்மை, முகவராண்மை போன்ற சொற்கள் ஆண் என்பதன் கலப்பல்ல. ஆனால் ஆணாதிக்கம் என்பதில் ஆண் நேரடியாக உள்ளது. அதனால் அச் சொல்லை இங்கே மேலாதிக்கம் என்று பயன்படுத்துகிறேன்.) மேலாதிக்கச் சிந்தனையுடைய அரசுகள் இதனை கவனத்தில் எடுப்பதும் அவசியமாகிறது. உதாரணமாக மக்களின் வாழ்வை ஒன்றோடொன்று இறுக்கமாக முடிச்சுப்போட்டு வைத்திருக்கும் குடும்பக் கட்டமைப்பு சார்ந்த அரச பதிவேடுகள் பெண்களை இரண்டாம் பிரஜைகளாகவே ஆக்கி இருப்பதை நாம் அறிவோம்.

இணையராக நடத்தும் அரச ஆவணங்கள் ஏதுமில்லை. எப்போது பதிந்தாலும் தந்தையின் பெயருடனோ துணையின் பெயருடனோ இரண்டாம் நிலைதான் பெண்ணின் பெயருக்குண்டு. தந்தையின் பெயரைக்கூட முழுப்பெயராக ஏற்கலாம். இணையரின் பெயரை ஒரு பெண்ணின் முழுப்பெயராகப் பதிய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுவதெல்லாம் ஆதிக்கச் சிந்தனையின்பாற்பட்டது.

அவளை அவளின் பெயரால் அழைப்பதில் யாதொரு குறையும் இல்லை. ஒரு பெண் ஆசிரியையின் வரவுப் பதிவேட்டில், ஒரு பெண் உத்தியோகத்தரின் தகுதிச் சன்றிதழில் ஒரு பெண் அதிகாரியின் அலுவலக மேசையில் இருக்கும் பெயர்ப் பலகையில் அவளது பெயர் இருப்பதுதானே நியாயமாகும்.

பெண்ணே தன் இணையின் பெயரைத் தனக்கான இடத்தில் வைத்துக் கொள்ள முன்வந்தால் இங்கே அவளால் அவள் காணாமல்போகச் செய்யப்படுகிறாள். இதன் விழிப்புநிலை பெண்களுக்கும் வேண்டும். உன் அலுவலக மேசையில் என் பெயர் எதற்கு? உன் பெயரை வைத்துக்கொள்ளேன் என்று தம் திருமதிகளுக்குச் சொல்லக்கூடிய திருவாளர்களும் வேண்டும்.