மார்ச் 23, 2021- பகத்சிங்கின் 90ஆவது நினைவு நாள் பொருத்தப்பாடு…

தோழர் பகத்சிங் இதே நாளில் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தனது இன்னுயிரை இழந்தார். அவர் என்ன காரணத்திற்காய் தனது உயிரை இழந்தாரோ அதே காரணம் அடிப்படையாய் இன்னமும் இருக்கிறது.

அவர் பிறந்து வளர்ந்து உயிரை இழந்த நிலப்பரப்பானது இன்று உலகே இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கும் விவசாயிகள் போராட்டத்தை கடந்த நூறு நாட்களுக்கும் மேலாய் முதன்மையாய் முன்னெடுத்து வருகிறது.

அக்காலத்தில் பகத்சிங் மேற்கொண்ட அரசியல் நிலைப்பாடுகளும் நடவடிக்கைகளும் அதற்கேற்ற வாழ்க்கையும் உயிர்த்தியாகமும் இன்றும் பொருத்தப்பாடாகவே இருக்கிறது.

அவர் ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற நூலை எழுதியதன் உள்ளடக்கமானது இந்துத்துவப் பாசிஸ்டுகளின் ஆட்சியை புரிந்துகொள்வதற்கு வழிவகுக்கும்.

இத்தகைய பாசிஸ்டுகள் பகத்சிங் தூக்கு கயிற்றில் உயிர்த்தியாகம் நிகழ்ந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அமைப்பாய் தம்மை திரட்டிக் கொள்வதற்கு ‘ஆர்எஸ்எஸ்’ எனும் விஷக் கயிறை இந்தியா முழுவதும் சுருக்கு கயிறாய் விரவினர்.

ஆர்எஸ்எஸ் சுருக்கு கயிறுக்காரர்கள் தமது பாசிச அமைப்பை தொடங்கி  ஏகாதிபத்தியத்தையும் இந்தியப் பெருமுதலாளிகளையும் அன்றிலிருந்து தொடர்ந்து காப்பாற்றிவருகிறார்கள். இத்தகையோரிடம்தான் இந்தியாவின் அரசும்/அரசாங்கமும் சிக்கியிருக்கிறது.

பகத்சிங் தூக்கு மேடை ஏறுவதற்கு சற்று முன் வாசித்துக் கொண்டிருந்த ‘அரசும் புரட்சியும்’ எனும் நூல் அப்போது இதை நிரூபித்ததைப் போலவே இப்பொழுதும் நிரூபிக்கிறது.

பகத்சிங் தான் படைக்க விரும்பிய சமூகத்தின் தன்மையை தான் தொடங்கிய அமைப்பின் பெயரிலேயே ‘சோசலிசக் குடியரசு’ எனும் சொல்லாக்கங்களை சேர்த்தார். அப்பொழுது இந்திய துணைக் கண்டம் முழுவதுமே அரசியல் சுதந்திரமும் இல்லாமல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முழு காலனியாய் இருந்தது.

பகத்சிங்கின் உயிர்த் தியாகம் உள்ளிட்டு இட்ட அடித்தளத்தில்தான் இன்றைய இந்திய நிலப்பரப்பானது ‘குடியரசு’ என்று முப்பதாண்டுகள் கழித்து பிரகடனப்படுத்தப்பட்டது.

பகத்சிங் கனவு கண்ட ‘சோசலிசக் குடியரசு’ இந்தியாவில் இன்னமும் படைக்கப்படாவிட்டாலும் 1950ல் பிரகடனப்படுத்தப்பட்ட  ‘குடியரசை’யும் காப்பாற்றுவதற்கு எளிதில் முடியாத நிலைமை வந்துவிட்டது.

பகத்சிங் காலத்திய சட்டமியற்றும் அவை தொழிலாளர்களுக்கு விரோதமாய் இயற்றியதற்கு எதிராகத்தான் அவர் குண்டுவீசி தூக்கு கயிற்றை முத்தமிட்டார்.

மேற்காண் அவையின் இயல்பான வாரிசான இன்றைய இந்திய நாடாளுமன்றம் காலனிய ஆட்சியில் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கும் சட்டங்களை இயற்றியிருக்கிறது.

இவ்வாறு பகத்சிங் காலத்திய சமூகத்தைப் போலவே அடிப்படையில் வேறுபடாத சமூகமே இன்றைய இந்தியா. இத்தகைய இன்றைய இந்தியாவில் இந்துத்துவப் பாசிசம் அரியணையில் அமர்ந்திருக்கிறது.

பகத்சிங்கின் உயிர்த்தியாகத்துக்கு காரணமான அவரது கொள்கையே இந்துத்துவப் பாசிசத்துக்கு இன்று சாவு மணி அடிக்கும் அளவுக்கு அவரது பொருத்தப்பாடு அமைகிறது.

தோழர் – பாஸ்கர்