மாகாண சபை தேர்தல் தொடர்பான தீர்மானம் இன்றைய அமைச்சரவையில்

மாகாண சபை தேர்தலை நடத்தும் முறை தொடர்பான இறுதி தீர்மானம் இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.  முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு ஆலோசனை நடத்துவதற்காக ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அமைச்சர்கள் சிலரின் ஆலோசனைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு அமைய இத்தீர்மானம் இன்று ஆராயப்படவுள்ளது.

அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜானக்க பண்டார தென்னக்கோனினால், இதற்கான 2 மாற்று யோசனைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

முன்னர் போன்று பழைய விருப்பு வாக்கு முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதா? அல்லது புதிய தொகுதி முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, தேர்தலை பழைய முறையில் நடத்துவதானால், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள, மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான புதிய சட்டத்தை நீக்கி, பழைய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

விகிதாசார முறைமை மற்றும் கலப்பு தொகுதி முறையில் தேர்தலை நடத்துவதானால், தொகுதிவாரியாக 70 சதவீதமும், விகிதாசார முறைமையின் கீழ் 30 சதவீதமும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான புதிய சட்டமூலத்தை உருவாக்குவதற்கும் அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் இரண்டாவது யோசனையை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

கடந்த ஆட்சி காலத்தில் தேர்தல் இடம்பெறவில்லை என தற்போதைய அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால் தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைத்து ஒரு ஆண்டு கடந்துள்ள நிலையில் தேர்தல் நடத்தப்படவில்லை.

எந்த முறையிலாவது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.