மலையக மக்கள் மொழியுரிமைக்கு வலுச்சேர்க்க வேண்டும் – துரைசாமி நடராஜா

ஒரு மனிதனின் உரிமைகளுள் மொழியுரிமை முக்கிய இடம் பெறுகின்றது. இவ்வுரிமையை உரியவாறு பாதுகாத்து முன் செல்வதால் சாதக விளைவுகள் பலவும் ஏற்படுகின்றன. எனினும் மலையகத்தைப் பொறுத்தவரையில், மொழியுரிமை பல்வேறு சந்தர்ப்பங்களில் மீறப்பட்டு வருகின்றது என்பதோடு, மக்களும் இது குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்களாக இருந்து வருகின்றமை வருந்தத்தக்க விடயமாக உள்ளது.

மனிதனின் கண்டுபிடிப்புக்களுள் மொழி என்பது மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக விளங்குகின்றது. ஆதிகாலத்தில் சைகைகளின் மூலமாக கருத்துக்களை வெளிப்படுத்திய மனிதர்கள், இக்கட்டான நிலைமைகள் பலவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் மொழி கண்டுபிடிக்கப் பட்டதன் பின்னர் கருத்துப் பரிமாற்ற நடவடிக்கைகள் இலகுவாகின.

அத்தோடு துரிதமாகவும், நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. தாய்க்கு நிகராக மொழியை சிறப்பித்துக் கூறுகின்ற ஒரு வழக்கமும் எம்மிடையே காணப்படுகின்றது.

இத்தனை சிறப்புப் பெற்ற மொழியினை நாம் உரியவாறு பேணி எமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனினும் மலையகத்தைப் பொறுத்தவரையில் மொழியுரிமை என்பது கேள்விக்குறியான ஒரு விடயமாகவே காணப்படுகின்றது. மொழி இந்த நாட்டில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுவதற்கு உந்துசக்தியாக இருந்திருக்கின்றது.

1956ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் இந்நாட்டில் தமிழ் மக்களின் மொழி உரிமைக்கு ஆப்பு வைத்தது. பல தமிழர்கள் இதனால் தமது தொழில்களை இழக்கின்ற அபாயகரமான சூழ்நிலையும் உருவானது. இதனால் ஏற்பட்ட தழும்புகள் அநேகமாகும்.

தனிச் சிங்களம் எனும் கொள்கை இந்த நாட்டில் பொது வாழ்க்கையில் தமிழ் மொழியை அதற்குரிய ஸ்தானத்தில் இருந்து வெறுமனே விலக்கி வைப்பதை மட்டும் கருதவில்லை. ஆனால் அது இந்த நாட்டின் தமிழ்மொழி பேசும் மக்களை இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார வாழ்க்கை என்பவற்றில் இருந்தே வெளியே தள்ளி வைக்கின்றது என்று தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கம் 1964 இல் தெரிவித்திருந்தார்.

இக்கூற்றில் இருந்து தனிச்சிங்கள சட்டத்தின் கொடுமைத் தன்மையை எம்மால் விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது. தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்தவர்கள் கூட பின்னர் அரசியல் இலாபம் கருதி அதற்கு ஆதரவு வழங்கியமை தெரிந்த விடயமேயாகும். இவையெல்லாம் வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயங்களேயாகும்.

13 ஆவது அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மொழியும் அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மொழிக்குக் கிடைத்த ஒரு சிறப்பாகும். எனினும் தமிழ் மொழி அரச கரும மொழிகளுள் ஒன்றாக இருந்தபோதும், அதன் நடைமுறைப் பயன்பாடு என்பது திருப்தி தருவதாக இல்லை. குறிப்பாக மலையகப் பகுதிகளில் தமிழ் மொழியின் அமுலாக்கல் குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

அரச அலுவலகங்களில் தமிழ் மொழியில் காரியமாற்றக்கூடிய வாய்ப்புகள் இன்னும் விருத்தி பெறவில்லை. பல வேளைகளில் சிங்கள மொழியிலேயே காரியமாற்ற வேண்டிய நிலைமை மேலெழுந்து காணப்படுகின்றது. பேருந்து மற்றும் வீதிகளில் காணப்படும் பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துக்களில் அதிகளவான பிழைகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அரச அலுவலகங்களின் பெயர்ப் பலகைகள் சிலவற்றிலும் இத்தகைய நிலைமையையே அவதானிக்க முடிகின்றது. பிழையான எழுத்துக்களை திருத்தியமைக்க வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றபோதும், இது தொடர்பில் கரிசனை இல்லாத தன்மையே வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.

23467069 1627021354022068 3126925049990377972 o மலையக மக்கள் மொழியுரிமைக்கு வலுச்சேர்க்க வேண்டும் - துரைசாமி நடராஜா

மலையக மக்களிடையே மொழி குறித்த உணர்வு வெகுவாக குறைந்து காணப்படுவதாக ஒரு விமர்சனம் இருந்து வருகின்றது. மொழி ரீதியாக உரிமைகள் மீறப்படுகின்றபோது அவர்கள் பல சந்தர்ப்பங்களில் வாய்மூடி மௌனியாக இருக்கின்றமை வருந்தத்தக்க விடயமாகும். பேராசிரியர் சோ.சந்திரசேகரன் முன்னதாக அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராகக் கடமையாற்றி இருந்தார்.

இதன்போது மலையகத்தில் இருந்து வரும் மொழி குறித்த உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் மிகவும் குறைவாகவே காணப்பட்டதாக வருத்தம் தொரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். மலையகத்தின் சில கல்வி வலயங்களில் ஆசிரியர்களுக்கான செயலமர்வுகள் கூட தனிச் சிங்கள மொழியிலேயே நடாத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

 

இதனால் பல ஆசிரியர்கள் மொழி புரியாது, கூறப்படுகின்ற விடயங்கள் என்ன என்பதனை அறிந்து கொள்ள முடியாது பெரும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். ஆசிரியராகளின் தட்டிக் கேட்கும் திராணியற்ற நிலையானது சிங்கள மொழியில் செயலமர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு வலு சேர்க்கின்றது.

இதேவேளை சில வலயங்களில் இருந்து பாடசாலைகளுக்கு அனுப்பப்படுகின்ற கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் உள்ளிட்ட பல ஆவணங்கள் சிங்கள மொழியிலேயே காணப்படுவதாக அதிபர்களும், ஆசிரியர்களும் குறைபட்டுக் கொள்வதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவையனைத்தும் மொழியுரிமை மீறலின்பாற்பட்ட விடயங்களாகும். இந்நிலையில் தமிழ் அரச கரும மொழிதானா? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

மலையகத்தில் இடம் பெற்ற பல்வேறு முரண்பாட்டுச் சூழ்நிலைகள் காரணமாக இங்குள்ள மக்களில் சிலர் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளுக்கு இடம்பெயர நேரிட்டது. இதனடிப்படையில் 1972ஆம் ஆண்டு காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து உருவான பஞ்ச நிலை மற்றும் வேலையின்மை, 1983 ஜூலை இனக்கலவரம் போன்ற பல ஏதுக்களால் மலையக மக்களின் இடம்பெயர்வு துரிதப்படுத்துப்பட்டது.

இவ்வாறாக தென் பகுதிக்கு இடம் பெயர்ந்தவர்கள் பெரும்பான்மை மக்களுடன் இணைந்து வாழ்வதன் காரணமாக தமது மொழி, கலாசாரம், அடையாளம், பண்பாடு என்பன மழுங்கடிக்கப்பட்ட நிலையில் இப்போது வாழ்ந்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இவர்களில் சிலர் தமிழ்ப்  பெயரினைக் கொண்டுள்ளபோதும், தமிழில் ஒரு வார்த்தையைக் கூட பேசுவதற்கோ அல்லது எழுதுவதற்கோ இயலாதவர்களாக காணப்படுகின்றமை வருந்தத்தக்க விடயமே யாகும்.தாய் மொழியை மறந்த நிலையில் இவர்களின் வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

மலையகத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் சிலர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த யுவதிகளை மணமுடித்து குடும்பம் நடாத்தி வருகின்றனர். இத்தகைய நிலைமைகள் மொழி உரிமைக்கும் குந்தகமாக அமைந்துள்ளது எனலாம். இன்னும் சில மலையக தமிழ் இளைஞர்கள் வலிந்து சிங்கள மொழியைப் பேசுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை அவர்கள் ஒரு கௌரவமாகக் கருதி செயற்படுகின்றனர். பேசும்போது இடையிடையே தமிழ் சொற்களுக்குப் பதிலாக சிங்கள மொழிச் சொற்களை இவர்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இது தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ள ஒரு இழுக்காகக் கருதமுடியும்.

ஒவ்வொரு சமூகத்தினருக்கும் அச்சமூகத்தினருக்குரிய சடங்குகள், சம்பிரதாயங்கள் மற்றும் கிரியைகள் உள்ளிட்ட பலவும் முக்கியத்துவம் மிக்கதாகும். இவற்றை உரியவாறு பேணி பின்வரும் சந்ததிக்கு எடுத்துச் செல்ல வேண்டிய மிகப் பெரும் பொறுப்பு அந்த சமூகத்தினரைச் சார்ந்ததாகும்.

எனினும் மலையக மக்களின் சில சடங்கு சம்பிரதாயங்களில் கூட பெரும்பான்மை கலாசாரத்தின் கலப்பு இடம்பெற்று வருகின்றமையைக் காணமுடிகின்றது. இவைகளை நோக்குகையில் பின்வரும் சந்ததிகள் எமது கலாசார முக்கியத்துவத்தினை எவ்வாறு விளங்கிக் கொள்ளப் போகின்றன என்ற கவலையே மேலெழும்புகின்றது. எனவே மொழியுரிமையுடன் சேர்த்து மலையக மக்களின் கலாசார உரிமைகளும் மெதுமெதுவாகப் பறிபோய்க் கொண்டிருக்கின்றன என்பதனை இங்கு கூறியாதல் வேண்டும்.

தமிழும் அரசகரும மொழி என்ற அடிப்படையில் சகல அரச நிறுவனங்களிலும் எமது மக்கள் சென்று தங்குதடையின்றி சேவையாற்றக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிப் பயிற்சி மிக்க உத்தியோகத்தர்கள் சேவைக்கு உள்வாங்கப்பட வேண்டும். தொடர்பாடல் உத்தியோகத்தர்களுக்கு இந்த இரு மொழிப் புலமை என்பது மிகமிக அவசியமாகும்.

தமிழ் மொழியுரிமை மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் தட்டிக் கேட்கின்ற ஆளுமையை ஒவ்வொரு தமிழ் மகனும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழன் என்று சொல்லடா. தலை நிமிர்ந்து நில்லடா என்பார்கள். இதற்கேற்ப தமிழுக்கு வலு சேர்ப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் கடமையாகும். தமிழ் மொழிக்கு உரிய உரிமையை கேட்டுப் பெறாது குனிந்து கொண்டிருப்போமானால் தலையில் குட்டு விழுந்து கொண்டே இருக்கும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.