Home செய்திகள் மலேசியாவில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எனக் கைதானோரை விடுவிக்க கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

மலேசியாவில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எனக் கைதானோரை விடுவிக்க கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எனக் கூறி, மலேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட 12பேரையும் விடுவிக்கக் கோரி அவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் இரு வேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். இவர்களில் மலாக்கா மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதனின் மனைவி உமாதேவி தனது கணவரை விடுவிக்கும் வரை தான் சாகும்வரை உண்ணாநோன்பு இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பையடுத்து, கோலாலம்பூரில் உள்ள மலேசிய காவல்துறை தலைமை அலுவலகமான புக்கிட் அமானுக்கு எதிரே சாலையோரம் அமர்ந்து தனது போராட்டத்தையும் உமாதேவி தொடங்கியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டு கைதாகியுள்ள எஸ்.சந்துரு, வி.சுரேஸ்குமார் ஆகியோரின் மனைவிமாரும் உமாதேவியுடன் சேர்ந்து இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்

உமாதேவி பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, கணவரை தடுத்து வைத்திருப்பதால் தீபாவளி கொண்டாடும் எண்ணம் தமக்கு இல்லை என்று கூறினார்.

தமது கணவர் சாமிநாதன் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக அனுதாப கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார் என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் அவருக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்றும் உமாதேவி மேலும் தெரிவித்தார்.

அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு தெரிவிப்பது குற்றமா? என்று கேள்வி எழுப்பிய அவர், தந்தை எங்கே எனக் கேட்கும் தனது பிள்ளைகளிடம் பொய் சொல்லி சமாளிக்க முடியவில்லை என்றார்.

mala மலேசியாவில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எனக் கைதானோரை விடுவிக்க கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்“கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் மலாக்கா மாநிலத்தில் மக்கள் நலனிற்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாங்கம் அமைய வேண்டும் என்பதற்காக எனது கணவரும், அவருடன் சேர்த்து தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றைய இருவரும் கடுமையாக உழைத்தனர் இன்று அவர்களுக்கே இப்படியொரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

எந்தச் சட்டத்தை அகற்ற வேண்டும் என நம்பிக்கை கூட்டணி வாக்குறுதி அளித்ததோ, இன்று அதே சட்டத்தின் கீழ் 12பேர் கைதாகியுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான என் கணவருக்கே இந்த நிலைமை என்றால் சாமானியர்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். நாளை மற்றவர்களுக்கும் இதே நிலைமை ஏற்படலாம். இவற்றிற்கெல்லாம் பிரதமர் துன் மகாதீர் பதிலளித்தே தீர வேண்டும்“ என்று உமாதேவி கூறினார்.

இதற்கிடையில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12பேரையும் விடுவிக்கக் கோரி கோலாலம்பூரில் மெழுகுவர்த்தி ஏந்தி பொது மக்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் “கைது செய்யப்பட்டவர்களை தீபாவளிப் பண்டிகைக்கு முன்பு விடுவிப்பது சாத்தியமில்லை” என மலேசிய காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தின் போது கைதானவர்கள் தங்கள் குடும்பத்தைப் பிரிந்திருப்பது தமக்கு வருத்தம் அளிப்பதாகவும் குறிப்பிட்ட அவர், “எனினும் நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், வேறு வழியில்லை“ என்றார்.

கைதானவர்களின் குடும்பத்தினர் உட்பட அனைத்து தரப்பினரும் விசாரணை முழுமையடையும் வரை பொறுமை காக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தடுத்து வைக்கப்பட்டவர்கள் நல்ல முறையில் கவனித்துக் கொள்ளப்படுவர் என்றும், சட்டம் அவர்களுக்கு வழங்கியுள்ள உரிமை நிலைநாட்டப்படும் என்றும் காவல்துறை தலைவர் உறுதியளித்துள்ளார்.

Exit mobile version