மரியசேவியர் என்ற மகத்தான ஆளுமை

ஈழத்தின்  கலை  இலக்கியப் புலத்திலும், அர்ப்பணிப்புள்ள சமூகப்பணிகளிலும்,  கலை இலக்கியப் பாரம்பரியத்திலும் தனது பணிகளினாலும் கலை ஆளுமையினாலும் முதன்மைப்படுத்தப்பட்ட  அருட்கலாநிதி நீ. மரியசேவியர் அடிகள். தனது 81ஆவது வயதில் இவ்வுலகை நீத்தார்.

கடந்த ஆறு தசாப்தகாலமாக கலை இலக்கியத் துறைகளோடும், சமுகப்பணிகளோடும் தன்னைக் கரைத்துக் கொண்டவர், இனம், மதம் மொழிகடந்து ‘மனிதம்’ என்ற உயரிய சிந்தைனையை வாழ்வாக்கிக் கொண்டவர், திருமறைக் கலாமன்றம் என்ற கலாசார நிறுவனத்தினை உருவாக்கி அதனுடாக இறுதிவரையும், நாடுதழுவியும் நாடுகடந்தும் பணியாற்றிக் கொண்டிருந்தவர். அம்மன்றத்தினூடக உருவாக்கம் பெற்ற பல படைப்பாளிகள் இன்று உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஈழத்திலே யுத்தம் கொழுந்துவிட்டெரிந்த காலத்தில் தனித்து நின்று கலைசெய்து கலையினூடாக தமிழ் இனத்தின் துயரங்களை உலகறிய செய்ததுடன், துயருற்ற மக்களுக்கான கலைவழி ஆற்றுப்படுத்தலையும் செய்தவர். இத்கைய சிறப்புக்குரிய கலைக்குருவாகிய மரிசேவியர்அடிகள் கடந்த முதலாம் திகதி இறைவனடி சேர்ந்தார். நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன.

மரியசேவியர் அடிகள், 03.12.1939 அன்று இளவாலையில் பிறந்தார். கலைப் பூமியாகிய இளவாலையில் பாலப்பருவத்தில் இருந்தே கூத்துக்களில் நடித்தது மட்டுமன்றி கோவில் பாடகர் குழாமில் பாடல்களைப் பாடுதல், பாடசாலையில் நாடகங்கள் நடித்தல் என தனது கலை ஆர்வத்தினை வளர்த்துக்கொண்டவர்,

1963 ஆம் ஆண்டில் இருந்தே கலைச் செயற்பாடுகளை ஆற்றத் தொடங்கிய மரியசேவியர் அடிகள் திருமறைக்கலாமன்றம் என்னும் அமைப்பினை 1965 ஆண்டு ஆரம்பித்து இன்று வரைக்கும் அதன் இயக்குநராக இருந்து பணியாற்றிக்கொண்டிருப்பவர். ஆரம்பத்தில் தனியே திருப்பாடுகளின் காட்சிகளையும் நாடகங்களையும் மட்டும் நிகழ்த்தும் நிறுவனமாக உருவாக்கி 1988 ஆம் ஆண்டில் இருந்து இன மத மொழி கடந்தியங்கும் கலாசார மையமாக பல்வேறுபட்ட பணிகளைகளையும் ஆற்றிவரும் நிறுவனமாக இதனை வளர்த்தெடுத்தார்.

தொண்ணூறுகளில் யுத்தம் முனைப்புபெற்ற காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினையை தென்பகுதியில் யாரும் பேசமுடியாத காலத்தில் ‘கலை’ என்ற தளத்தில் எல்லா மனிதர்களையும் சந்திக்கச் செய்யமுடியும் என்ற கொள்கையுடன் சமாதானத்துக்கான பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டார். யுத்தத்தின் பயங்கரத்தினை வெளிப்படுத்தவும் சமாதானத்தின் அவசியத்தினை வலியுறுத்தவும் தலைநகரில் ‘வார்த்தைகளற்ற நாடகம்’  என்ற வகைமையை  உருவாக்கி. பல நாடகங்களை மேடையேற்றினார். ‘புறம்’ ‘அசோகா’, ‘தர்ஷனா’ ‘கி.மு.200’… போன்ற அவரது நாடகங்கள் தலைநகரில் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தின. ‘ஊமம்’ முறைமையில் மரியசேவியர் அடிகளினால் பரீட்சார்த்தமாக உருவாக்கப்பட்ட அவ் வடிவம் எந்த மொழி பேசுபவராலும் புரிந்து கொள்ளக்கூடிய, இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வடிவமாக அமைந்தது.

புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற எம்மவர்களை இணைத்து அங்கு கிளைகளை உருவாக்கியதுடன், திருமறைக்கலாமன்றத்தின் பணிகளை அங்கும் ஆற்றிவருவதுடன்  எம்மவர்களை சந்தித்து மண்ணின் உறவுகளையும், கலாசார வேர்களையும் புத்துயிர்ப்பு செய்யும் வகையிலான பல்வேறு கலாசாரக் கலைப்பயணங்களை அசாத்திமான காலச் சூழல்களிலெல்லாம் பகீரத பிரயத்தனங்களின் மத்தியில் மேற்கொண்டு இங்கிருந்த எமது கலைஞர்களுக்கான சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தி இதுவரை 19 தடவைகள் வெளிநாட்டுக் கலைப்பயணங்களை மேற்கொண்டார். இவரது கலைத்தூதுப் பயணங்களை மதித்து யேர்மன் ஆன்மீகப் பணியகம் இவருக்கு 1998ஆம் ஆண்டு  ‘கலைத்தூது’ என்ற பட்டத்தினை வழங்கி கௌரவித்தது.

சிறிய வயதில் இருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய இவர், இரட்டை வகுப்பேற்றங்களினால் குறைந்த வயதிலேயே தனது குருத்துவக்கல்வியை முடித்து, 22வயதில் பாப்பரசரின் விசேட அனுமதியுடன் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டது மட்டுமன்றி, உரோமைப் பல்கலைக்கழகத்தில்  இறையியலில் கலைமாணி, முதுதத்துவமாணி கற்கைகளை தனது இளவயதிலேயே நிறைவு செய்தார். பின்னர், தமிழகத்தில் மதுரைத்தமிழ்ச் சங்கத்தில் தமிழை சிறப்பு பாடமாக பயின்று  ‘வித்துவான் புலவர்’ பட்டங்களைப் பெற்றார்,

நாடகம்பற்றி தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவற்றைவிட திருமறைக் கலாமன்றத்தினூடாக  ‘கலைமுகம்’ என்னும் கலை இலக்கிய இதழினை 1990 ஆம் ஆண்டுமுதல் பிரதான ஆசிரியராக இருந்து நடத்தி வந்திருந்தார்,