மரபணு மாற்றமடைந்த இந்திய வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகள்

இந்தியாவில் மிக வேகமாக பரவிவரும் மரபணு மாற்றமடைந்த கொரோனோ வைரஸிற்கு எதிராக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் மற்றும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட அஸ்ரா சீனிக்கா நிறுவனம் ஆகியவை தயாரிக்கும் தடுப்பு மருந்துகள் செயற்படும் திறன் உள்ளதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக பி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலாவது தடுப்பு மருந்துகளை செலுத்தியவர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தடுப்பு மருந்துகள் மரபணுமாற்றமடைந்த இந்திய வைரஸிற்கு எதிராக 33 விகிதம் பாதுகாப்பாகவும், மரபணுமாற்றமடைந்த பிரித்தானியாவின் கென்ற் வைரஸிற்கு எதிராக 50 விகிதம் பாதுகாப்பாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டாவது தடுப்பு மருந்துகளை செலுத்தியவர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து மரபணுமாற்றமடைந்த இந்திய வைரஸிற்கு எதிராக 80 விகிதம் பாதுகாப்பாகவும், மரபணுமாற்றமடைந்த பிரித்தானியாவின் கென்ற் வைரஸிற்கு எதிராக 93 விகிதம் பாதுகாப்பாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அஸ்ரா சீனிக்கா நிறுவனத்தின் தடுப்பு மருந்து மரபணுமாற்றமடைந்த இந்திய வைரஸிற்கு எதிராக 60 விகிதம் பாதுகாப்பாகவும், மரபணுமாற்றமடைந்த பிரித்தானியாவின் கென்ற் வைரஸிற்கு எதிராக 66 விகிதம் பாதுகாப்பாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இரு மருந்துகளும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் ஆகியவற்றின் அதிகரிப்பை வெகுவாக குறைத்துவருவதாக அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்பிரல் 5 ஆம் நாள் முதல் மே 16 ஆம் நாள் வரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 12,675 மரபணுக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

எதிர்வரும் மாதம் 21 ஆம் நாள் முற்றாக கோவிட்-19 பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தளர்த்தும் தமது திட்டத்திற்கு இந்த ஆய்வு வலுச் சேர்ப்பதாக பிரித்தானியாவின் சுகாதாரத்துறை செயலாளர் மற் ஹன்கொக் தெரிவித்துள்ளார்.

ஆய்வில் பெறப்பட்ட தகவல்கள் மிகவும் காத்திரமானவை என தொற்றுநோய் பிரிவின் வைத்தியக் கலாநிதியும், இந்த ஆய்வின் தலைவருமாக வைத்தியர் ஜஸ்மின் பேர்னால் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆய்வின் முடிவுகள் தெளிவானவை நாம் சரியான திசையில் செல்கிறோம் என கோவிட்-19 தடுப்பு வியூகங்களின் பிரிவுத் தலைவர் பேராசிரியர் சூசன் கொப்சின்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் 50 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தடுப்பு மருந்துகளை பெற்றுள்ளனர். இதில் 31 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் முதலாவது தடுப்பு மருந்ததையும், 18 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இரண்டாவது தடுப்பு மருந்தையும் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் 13,000 இறப்புக்களும், 39,100 வைத்தியசாலை அனுமதிகளும் தடுக்கப்பட்டுள்ளன என பிரித்தானியாவின் பொது சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.