Tamil News
Home செய்திகள் மரண தண்டனை கைதிக்கு பொது மன்னிப்பு வழங்கும் போது, ஏன் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது...

மரண தண்டனை கைதிக்கு பொது மன்னிப்பு வழங்கும் போது, ஏன் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது – சிறிநேசன்

யாழ்ப்பாணத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு பிடித்துச் செல்லப்பட்ட 8 தமிழர்களை படுகொலை செய்த மரண தண்டனை குற்றவாளியான இராணுவ சார்ஜன்டிற்கு பொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்த சிறிலங்கா அரசிற்கு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது போனது ஏன் என்றும்,  இது தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசு விடுத்துள்ள அச்சுறுத்தல் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி, எட்டு தமிழர்கள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். அதில் 5 வயது சிறுவனும், 18 வயது நிரம்பாத மூவரும் அடங்கியிருந்தனர். அதற்கு அடுத்த நாள், அவர்கள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மலக்குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்தப் படுகொலையில் தொடர்புடைய சிறிலங்கா இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க உள்ளிட்ட ஐந்து பேர், சிறிலங்கா பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜுன் 25ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் முக்கிய குற்றவாளியான சுனில் ரத்நாயக்கவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால், மற்ற நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதுவரை சுனில் ரத்நாயக்காவிற்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் உட்பட 34 முன்னாள் இராணுவத்தினருக்கு, சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ பொது மன்னிப்பு வழங்கியதால் அனைவரும் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு தமிழர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

நேற்று(23) நாடாளுமன்றம் கூடிய போது, அங்கு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சிறிநேசன், மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதகாரியை பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க சட்டம் கைகொடுக்கும் போது, சிறையிலுள்ள முன்னாள் தமிழ்ப் போராளிகளை விடுவிக்க சட்டத்தில் ஏன் வழியில்லை? சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில், சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

மிருசுவிலில் தமிழர்கள் எட்டுப் பேரின் குரல்வளையை அறுத்து, படுகொலை செய்த ஒரு மரண தண்டனைக் கைதி, பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசு விடுத்துள்ள அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறினார்.

Exit mobile version