Home செய்திகள் மன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

மன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

இந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடாவில் 62 புதியவகை உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியை மன்னார் வளைகுடா என்று அழைப்பர். இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமன்றி இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பரந்து விரிந்துள்ளது. சுமார் 10,500 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் பாம்பன் முதல் தூத்துக்குடி வரை 21 தீவுகள் அமைந்துள்ளன.

இந்த மன்னார் வளைகுடா பகுதி தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. உலகிலேயே மிகவும் அரியவகை கடல் வாழ் உயிரினங்களான முள்தோலிகள், சங்கு, சிப்பிகள், கணுக்காலிகள், திமிங்கிலங்கள், கண்களைக் கவரும் விதத்தில் வண்ண மீன்கள், பாலூட்டி வகையான கடல் பசுக்கள், கடல் அட்டைகள், கடல் பாம்புகள், கடல் குதிரைகள், கடல் பன்றிகள், கடல் ஆமைகள், பவளப் பாறைகள் என இங்கு மொத்தம் 4,223 கடல்வாழ் உயிரினங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு வாழ்ந்து  வருகின்றது.

mannar 3 மன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்புமன்னார் வளைகுடாவில் தற்போதுள்ள கடல்வாழ் உயிரினங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு, அந்த ஆய்வை நடத்த தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகந்தி தேவதாசன், கடல் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் நபார்ட் வங்கி மேற்பார்வையில் ஆய்வை மேற்கொண்டனர்.

இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கடலுக்கு அடியில் கணக்கெடுப்பை நடத்தினர்.

இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகள் 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டு, அவை அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் 11 கடல் பஞ்சு இனங்கள், 14 கடின பவளப்பாறை இனங்கள், 2 கடல்பாசி இனங்கள், 2 மீன் இனங்கள், 17 மெல்லிய பவளப்பாறை இனங்கள் 16 சங்கு இனங்கள் என 62 புதிய உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவை தவிர 50இற்கும் மேற்பட்ட அடையாளம் காண முடியாத புதிய உயிரினங்களும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 39 வடக்குப் பகுதியிலும் 11 தெற்குப் பகுதியிலும் காணப்பட்டன.

இவற்றை அடையாளம் காண, சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் முயன்று வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இந்த உயிரினங்கள் அனைத்தும் மன்னார் வளைகுடாவிற்கு புதியவை. கடந்த 2003 – 2005 இல் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்களையும், தற்போதைய ஆய்வுத் தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரியல் வளத்தில் பருவநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

இது பற்றி ஊடகமொன்றிற்கு தெரிவித்த சுகந்தி தேவதாசன், கடல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் பேட்டர்சன் எட்வேட், இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை 345 கிலோமீற்றர் தூரம் உள்ள மன்னார் வளைகுடா பகுதி முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2003 முதல் 2005 வரை மன்னார் வளைகுடா பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது தூத்துக்குடி முதல் பாம்பன் வரையிலான பகுதியில் பவளப்பாறைகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு சில அடிப்படைத் தகவல்கள் மட்டும் சேகரிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து ஆண்டு தோறும் மன்னார் வளைகுடா பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

ஆனால், தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை இதுவரை பெரிதாக ஆய்வுகள் எதுவும் நடத்தப்படாததால், இந்தப் பகுதிகளில் தற்போது விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்களையும், தற்போதைய ஆய்வுத் தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரியல் வளத்தில் பருவநிலை மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது என்றார்.

இந்த ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சியாளர் திரவியராஜ், கூறுகையில், பறவைகள் மற்றும் விலங்குகளை ஆண்டு ஒன்றிற்கு கணக்கெடுப்பு நடத்துவது போல் கடல் வாழ் உயிரினங்களையும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். காரணம் பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகிய காரணங்களால் கடல் வாழ் உயிரினங்கள் எண்ணிக்கை குறித்து தெரியவரும்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 4,223 வகையான கடல்வாழ் தாவரம் மற்றும் விலங்கினங்கள், கடல் பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வகை கடல் புற்களும் இருப்பதாகக் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டள்ளன.

ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தாங்கள் கடலுக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்த போது 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், 77 புதிய பவளப்பாறைத் திட்டுக்கள் மற்றும் 39 புதிய கடல் புல் திட்டுக்களும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 50 இற்கும் மேற்பட்ட அடையாளம் காணமுடியாத புதிய உயிரினங்களும் கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மன்னார் வளைகுடாவின் அனைத்து கடல் பகுதிகளிலும் கண்காணிக்க வேண்டும். அப்படி கண்காணித்தால், மட்டுமே கடலில் என்ன மாற்றம், பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தெரிய வரும். தற்போது நாங்கள் கடலிற்கு அடியில் நடத்திய கணக்கெடுப்பில் தூத்துக்குடி முதல் இராமேஸ்வரம் வரை அடர்த்தியான கடல் புல் திட்டுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல் 13 கடல் புல் வகைகளும் முன்னதாக கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர் மத்தியூ தெரிவிக்கின்றார்.

கடலிற்கு அடியில் ஆய்வு செய்வதற்கு மிகவும் முக்கியமான ஸ்கூபா டைவிங் குறித்து தினேஸ்குமார் பேசும் போது, கடல்வள ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கியமானது ஸ்கூபா டைவிங்.  இது ஒரு சாகச விளையாட்டு என்பதால் உடலளவிலும், மனதளவிலும் உறுதியாக இருக்க வேண்டும். கடலில் அதிக காற்று மற்றும் மழை காலங்களிலும் இந்த ஸ்கூபா டைவிங் செய்யலாம். கடலிற்கு அடியில் நடத்தப்படும் ஆய்விற்கு ஸ்கூபா அடைவிங் அவசியமான ஒன்று என்றார்.

 

 

Exit mobile version