மனித உரிமை ஆணையாளருக்கு க.வி.விக்னேஸ்வரன் கடிதம்

சர்வதேச சமூகங்களுக்கு மீண்டும் சமாதானத்தை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறிய ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் திருமதி மிசெல் பச்செலெட் ஜெரியாவிற்கு நன்றி கூறி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் விக்கினேஸ்வரன் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்,

“2020 செப்ரெம்பர் 14ந் திகதி உங்களால் வெளியிடப்பட்ட கருத்துரைக்கு இலங்கை என்ற தீபகற்பத்தின் தமிழ் மக்கள் தங்களது மனமார்ந்த நன்றியையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

இலங்கை அரசாங்கத்தினுடைய கவலை தரும் போக்கினை நீங்கள் அறிந்துள்ளமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது. அதாவது அதிகார நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பேணாதிருத்தல், குடியியல் பதவிகளுக்கு இராணுவத்தினரை நியமித்தல், போர்க்குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றினோடு தொடர்பிருக்கும் அலுவலர்களின் குற்ற ஆராய்வு சம்பந்தமாக பொறுப்புக் கூறல் அற்ற நிலை போன்றவை அவை.

UN Live United Nations Web TV - Michelle Bachelet (OHCHR) - Press  Conference: 70th Anniversary Universal Declaration of Human Rights (Geneva,  5 December 2018)

மேற்கூறிய அரசியல் ரீதியான குறைபாடுகளை வெளிக்கொண்டு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதை தமிழ் மக்கள் சுட்டிக் காட்ட விரும்புகின்றார்கள். இது தனிப்பட்ட ஒரு ஜனாதிபதிக்கு அப்பால் தொடர்ந்து வந்த நிர்வாக அலகுகளின் செயற்பாடுகள் தங்களால் குறிப்பிடப்பட்ட பண்பியல்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. இவை இலங்கையின் இதுவரை கால அரசாங்க முறைமையின் குறைபாடுகளாவன.

இந் நாட்டினுடைய அரசியல் ரீதியான தத்துவார்த்த வெளிப்பாடுகள் இவை. இப் பிராந்தியத்தின் சமாதானத்திற்கும் நிரந்தர அபிவிருத்திக்கும் நீங்கள் கூறுவது போல் இவை பாதிப்பாக அமையக் கூடும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் சர்வதேச வழிமுறைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் அமைய சகலரும் நடந்துகொள்வதில் தான் உண்மையான நல்லிணக்கம் ஏற்படும் என்பதில் தமிழ் மக்களிடையே மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதற்கான முக்கிய அடிப்படைக் கருத்துருவாக்கம் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் முதலாவது உறுப்புரையில் இடம்பெற்றுள்ளது. அதாவது சர்வதேச சமாதானமும் பாதுகாப்பும் வெவ்வேறு மனித குழுமங்களின் சம உரித்துக்களிலும் சுயநிர்ணயத்திலும் பிரிக்க முடியாதவாறு தங்கி இருக்கின்றன என்பதே அது.

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை மீதான பார்வை சர்வதேச சமூகங்களுக்கு மீண்டும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை அவர்களுக்கு எடுத்துக் காட்டுகின்றது. இதனை அடைய எடுக்கப்படும் சகல முயற்சிகளுக்கும் தமிழ் மக்கள் உற்ற துணையாக இருப்பார்கள் என்பதை உங்களுக்கு சொல்லி வைக்கின்றேன். அதிமேதகு தங்களுக்கு என்னுடைய நன்றிகள் உரித்தாகுக” என்று குறிப்பிட்டுள்ளார்.