Tamil News
Home செய்திகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை குறித்த 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் புதன்கிழமை ஆரம்பம்

மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை குறித்த 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் புதன்கிழமை ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் 08,09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 137 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமானதுடன், அக்கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழு என்பது 18 சுயாதீன நிபுணர்களை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் ஓர் கட்டமைப்பாகும்.

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றன என்பதைக் கண்காணிப்பதும், மீளாய்வு செய்வதுமே இக்கட்டமைப்பின் பிரதான பணிகளாகும்.

இலங்கை கடந்த 1980 ஜுன் 11 ஆம் திகதி சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தை ஏற்றுக்கொண்டது.

அதன்பிரகாரம் அச்சமவாயத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் அனைத்து நாடுகளும் அதனை நடைமுறைப்படுத்தும் அதேவேளை, மனித உரிமைகள் மீளாய்வுக்குழுக்கு அவ்வப்போது அறிக்கைகளை சமர்ப்பிப்பதுடன் மீளாய்வு செயன்முறையில் பங்கேற்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றன.

அதன்படி இலங்கை 1983, 1990, 1994, 2003 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் காலாந்தர அறிக்கைகளை சமர்ப்பித்திருப்பதுடன் 1983, 1991, 1995, 2003 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மீளாய்வுக்கூட்டங்களில் பங்கேற்றுள்ளது.

அதன்தொடர்ச்சியாக இலங்கையின் 6 ஆவது காலாந்தர அறிக்கை கடந்த 2019 பெப்ரவரி 22 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, அதனை அடிப்படையாகக்கொண்ட 6 ஆவது மீளாய்வு நாளை மற்றும் நாளை மறுதினம் (8-9) நடைபெறவுள்ளது.

இம்முறை 6 ஆவது மீளாய்வு செயன்முறையானது இலங்கையின் வேண்டுகோளுக்கு அமைவாக ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலகவின் தலைமையில் கலப்பு வடிவத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை மீளாய்வுக்கூட்டத்தில் இலங்கையின் சார்பில் பங்கேற்கும் குழுவில் ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு, ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம், நீதியமைச்சு, பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, சுகாதார அமைச்சு, சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் ஆகிய கட்டமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version