மனித உரிமைகள் கண்காணிப்பக அறிக்கை மிகைப்படுத்தப்பட்ட ஒன்று: வெளிவிவகார அமைச்சு சீற்றம்

மனித உரிமைகள் கண்காணிப்பக அறிக்கை

மனித உரிமைகள் கண்காணிப்பக அறிக்கை: மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ‘உலக அறிக்கை – 2022’ இல் இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தேவையற்ற எதிர்மறையான வகையில் சித்தரிப்பதாக வெளிவிவகார அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.

மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட சர்வதேச சமூகத்துடன் ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்கான கொள்கையை இலங்கை பின்பற்றுவதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சவாலான உலகளாவிய பொருளாதார மற்றும் சமூக சூழலின் போது பரபரப்பான மற்றும் பக்கச்சார்பான அறிக்கையிடல் உள்நாட்டு முரண்பாடுகளை தீவிரப்படுத்தி மோசமான நிலைமையைத் தோற்றுவிக்குமென வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பொறுப்பான சமநிலையான மற்றும் பாரபட்சமற்ற அறிக்கையிடலின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதாகவும் அதில்  கூறப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்திலான திருத்தம் பொறுப்புக்கூறல் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதிகளை விடுவித்தல் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் கொவிட் தொற்றுநோய் மற்றும் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் போன்ற பல துறைகள் தொடர்பான அண்மைய மாதங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்துவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச செயற்பாட்டாளர்களைப் பொறுத்தமட்டில் எமது சர்வதேச பங்காளிகளான ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேசத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நல்லெண்ணம் மற்றும் ஆலோசனைகளை அரசாங்கம் பெரிதும் மதிப்பதாகவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tamil News